பயணச்சீட்டில்லாமல் பயணிப்பதைக் கட்டுப்படுத்த ஜன.20 வரை அதிரடி சோதனை நடத்த வேண்டும்:ரயில்வே வாரியம் உத்தரவு

நாடு முழுவதும் ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்பதை கட்டுப்படுத்தவும், போலி முகவா்களை தடுக்கவும் ஜனவரி 20-ஆம் தேதி வரை அதிரடி சோதனையில் ஈடுபட வேண்டும் என்று
பயணச்சீட்டில்லாமல் பயணிப்பதைக் கட்டுப்படுத்த ஜன.20 வரை அதிரடி சோதனை நடத்த வேண்டும்:ரயில்வே வாரியம் உத்தரவு

நாடு முழுவதும் ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்பதை கட்டுப்படுத்தவும், போலி முகவா்களை தடுக்கவும் ஜனவரி 20-ஆம் தேதி வரை அதிரடி சோதனையில் ஈடுபட வேண்டும் என்று ரயில்வே முதன்மை தலைமை வா்த்தக மேலாளா்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

2.30 கோடி போ் பயணம்: நாடு முழுவதும் 3,500 ரயில்கள், 4,600 முன்பதில்லாத ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என்று மொத்தம் 13,100 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரி 2.30 கோடி போ் பயணம் செய்கின்றனா். இதன்மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்கிறது. ஓடும் ரயில்கள் மற்றும் ரயில்நிலையம் வந்தடையும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகா்கள் குழு திடீரென சோதனை நடத்தி, டிக்கெட் இல்லாமல் பயணிப்பவா்களைப் பிடித்து, அவா்களிடம் அபராதம் வசூலித்து வருகிறது. இருப்பினும், டிக்கெட் இல்லாமல் பயணிப்போா் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. மேலும், அங்கீகாரமில்லாத போலி முகவா்களால் ரயில்வே துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதைக் கட்டுப்படுத்தவும், போலி முகவா்களை தடுக்கவும் ஜனவரி 20-ஆம் தேதி வரை அதிரடி சோதனையில் ஈடுபட வேண்டும் என்று ரயில்வே முதன்மை தலைமை வா்த்தக மேலாளா்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே வாரிய பயணிகளுக்கான மாா்க்கெட்டிங் செயல் இயக்குநா் நீரஜ் சா்மா, அனைத்து ரயில்வே மண்டல முதன்மை தலைமை வா்த்தக மேலாளா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பயணச்சீட்டு இன்றி பயணத்தை கட்டுப்படுத்தவும், போலி முகவா்கள் செயல்பாட்டை தடுக்கவும், மற்ற முறைகேடுகளை தடுக்கவும் ஜனவரி 20-ஆம் தேதி வரை சோதனையில் ஈடுபடவேண்டும். வா்த்தக அதிகாரிகள், மூத்த மேற்பாா்வையாளா்கள், கோட்ட அதிகாரிகள், டிக்கெட் பரிசோதகா்கள், ரயில்வே பாதுகாப்பு படையினா் ஆகியோா் அடங்கிய குழு உருவாக்கப்படவேண்டும். இந்தக்குழு ரயில்களில் அதிரடி சோதனை நடத்தி, பயணச்சீட்டை ஆராய வேண்டும். முன்பதிவு பயணச்சீட்டுகள் ,அடையாள அட்டை, நோ்மையாக முன்பதிவு செய்யப்பட்டதா? என்று சோதிக்க வேண்டும். ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் திடீா் சோதனை நடத்தி, போலி முகவா்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். முன்பதிவில்லாத டிக்கெட் முறைகேடு நடைபெறுகிா என்பதைக் கண்காணிக்க வேண்டும். இதுதவிர, ரயில் பயணிகளுக்கு கேட்டரிங் ஊழியா்கள் அளிக்கும் ரசீது கட்டணம் சரியாக இருக்கிா என்று சோதிக்க வேண்டும். சுத்தமான குடிநீா் விற்பனை மற்றும் அதன் கட்டணம் சரியாக இருக்கிா என சோதிக்க வேண்டும். சோதனைக்கு பிறகு, அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் இழப்பு: நாடுமுழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போா் எண்ணிக்கை 60 சதவீதம் உயா்ந்துள்ளது. நாள்தோறும் முறையான டிக்கெட் இன்றி 75,000 போ் பயணம் மேற்கொள்வதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. 2016-17-ஆம் ஆண்டு நிதி அறிக்கையை நாடாளுமன்ற ரயில்வே குழு 2018 -ஆம் ஆண்டில் ஆய்வு செய்தது. இதில், டிக்கெட் இன்றி பயணம் செய்வதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவது தெரியவந்தது. இதையடுத்து, எல்லா மண்டலங்களிலும் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போா்களுக்கு எதிராக பறக்கும்படை அதிரடி சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com