பயனளிக்காத தனியார் வேலைவாய்ப்பு சந்தை!

வாரந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு சந்தைகள் நடத்தப்பட்டு வந்தாலும் கூட அதன் மூலம் தமிழக அளவில் 20 சதவீதம் பேர் கூட பயன்பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பயனளிக்காத தனியார் வேலைவாய்ப்பு சந்தை!

திண்டுக்கல்: வாரந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு சந்தைகள் நடத்தப்பட்டு வந்தாலும் கூட அதன் மூலம் தமிழக அளவில் 20 சதவீதம் பேர் கூட பயன்பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில், கடந்த சில மாதங்களாக வெள்ளிக்கிழமைதோறும் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில், கடந்த காலங்களில் மாதம் ஒரு முறை இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்பு சந்தைகள் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 தற்போது வாரந்தோறும் வேலைவாய்ப்பு சந்தை நடத்துவது என்பது, வேலைவாய்ப்பக அலுவலர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் தொழிலாளர் நல ஆய்வாளர்கள் மூலம் ஏற்படும் நெருக்கடி காரணமாக தொழில்நிறுவனங்கள், வாராந்திர வேலைவாய்ப்பு சந்தைகளில் வேறு வழியின்றி பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது.

 இதை நடத்துவதால் மாநில அளவில் 20 சதவீதம் பேர் கூட பயன் பெற முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் வேலைவாய்ப்பு சந்தைகளின் மூலம், தகுதியான பணியாளர்கள் கிடைக்காமல் வேலையளிக்கும் நிறுவனங்களும், முறையான ஊதியத்துடன் கூடிய பணிவாய்ப்பு கிடைக்காமல் வேலைநாடுவோரும் வாரந்தோறும் ஏமாற்றம் அடையும் நிலை உள்ளது. பெரும்பாலும் காப்பீட்டு நிறுவன முகவர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் பணிக்கே ஆள்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

 நிறுவனங்கள் ஏமாற்றுவதாக புகார்: வேலைவாய்ப்பு சந்தையின்போது ரூ.8 ஆயிரம் ஊதியம் வழங்குவதாகவும், 8 மணி நேர வேலை என்றும் வாக்குறுதி அளிக்கும் நிறுவனங்கள், அதனை நிறைவேற்றுவதில்லை என திண்டுக்கல் அடுத்துள்ள ஆவரம்பட்டியைச் சேர்ந்த ஜெகதீஷ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

 பெரும்பாலும் தனியார் வங்கிகளுக்கும், காப்பீட்டு நிறுவனங்களுக்கும் முகவராக தேர்வு செய்யும் நிறுவனங்களே தனியார் வேலைவாய்ப்பு சந்தைகளுக்கு அதிகளவில் வருகின்றன. சில நிறுவனங்கள் பணியில் சேருவதற்கு பணம் கேட்கின்றன. ஒருசில தொழில் நிறுவனங்கள் தேர்வு சந்தை நடைபெறும் இடத்திலேயே பணி நியமன ஆணையை வழங்குகின்றன. அதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செல்லும்போது பணியில் சேர அனுமதி மறுக்கப்படுகிறது. கடிதம் அனுப்புவதாக கூறி 6 மாதங்கள் வரை இழுத்தடிக்கின்றனர்.

 பணியில் சேர அனுமதித்தாலும், ஊதியத்தை குறைத்தும், 10 முதல் 12 மணி நேரத்திற்கும் கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என்றும் நிர்பந்திக்கின்றனர். இலக்கு நிர்ணயித்துக் கொண்டு, அதனை பூர்த்தி செய்தால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்ற நெருக்கடியும் உள்ளது. புதிய பணி வாய்ப்பில் உடனடியாக இலக்கை எட்ட முடியாமல் வெளியேற வேண்டிய நிலை உள்ளது. இதனால் தனியார் வேலைவாய்ப்பு சந்தை என்பது பெயரளவுக்கு நடத்தப்படுகிறது என்பதோடு, இளைய தலைமுறையினருக்கு பயனளிப்பதாக இல்லை என்றார்.

 வேலைநாடுவோரின் எதிர்பார்ப்பு அதிகம்: இந்த குற்றச்சாட்டு குறித்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த(தொழில்நுட்ப பிரிவு) சங்கர் என்பவர் கூறியதாவது: பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொண்டபோதிலும் பலர் வேலைக்கு வருவதில்லை. பணியில் சேரும் முன்பே, உயர்நிலையில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான வேலை நாடுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல் தொடக்கத்திலேயே அதிக ஊதியத்தையும் எதிர்பார்க்கின்றனர். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்கிறோம். ஆனால், அந்த பயிற்சியின்போது தொழிலை கற்றுக் கொள்ளும் ஆர்வமும், உழைக்க வேண்டும் என்ற மனநிலையும் இன்றைய இளைய தலைமுறையினரிடம் இல்லை.

 எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வருகின்றனர். இதுபோன்ற சூழலில் புதிதாக வேலையில் சேருவோரிடம், பணித் திறனை பரிசோதிக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் வேலையளிப்போருக்கு ஏற்படுகிறது. கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நூற்பாலைகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்ப கல்வி பயின்றவர்களுக்கான இந்த வாய்ப்புக்காக, தனியார் வேலைவாய்ப்பு சந்தைகளுக்கு சென்றால் தகுதியான விண்ணப்பதாரர்கள் வருவதில்லை. இதனால் வேறு வழியின்றி வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, பணியில் அமர்த்த வேண்டிய நிர்பந்தத்தை தொழில் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன என்றார்.

 இதுபோன்ற காரணங்களால் வாரந்தோறும் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு சந்தைகளால் வேலைநாடுநர்களுக்கும், வேலையளிக்கும் நிறுவனத்தினருக்கும் அலைகழிப்பு மட்டுமே மிஞ்சும் நிலை உள்ளது.

 தேவை விவரங்களுடன் அறிவிப்பு
 தனியார் வேலைவாய்ப்பு சந்தைக்கான அறிவிப்பு வெளியிடும்போது, எந்தெந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன, என்ன வகையான பணிக்கு ஆள்கள் தேர்வு நடைபெறுகிறது, அதற்கான கல்வித் தகுதி, ஊதியம் உள்ளிட்ட விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். அதற்கு ஏற்ப பணிநாடுவோரும், பணிவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுவதோடு, தேவையற்றவர்கள் வந்து அலைகழிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

 அதேபோல் தேர்வு செய்யப்படும் பணியாளர் பணியில் சேர்ந்தாரா, அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் அந்த நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதும் அவசியமாகிறது. அதைவிடுத்து கடமைக்காக வாரந்தோறும் வேலைவாய்ப்பு சந்தை நடத்துவதில் பயனில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 
 - ஆ.நங்கையார் மணி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com