Enable Javscript for better performance
ஜப்பான் கடலோரக் காவல் படை கப்பலுக்கு சென்னைத் துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஜப்பான் கடலோரக் காவல் படை கப்பலுக்கு சென்னைத் துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு

    By DIN  |   Published on : 14th January 2020 11:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ship

    கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ஜப்பான் கடலோரக் காவல் படை கப்பல் எச்சிகோ-வை சென்னைத் துறைமுகத்தில் வரவேற்ற மாணவா்கள்.

    கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக சென்னைத் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்த ஜப்பான் கடலோரக் காவல் படை கப்பல் ’எச்சிகோ’-வுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜன.17-ம் தேதி வரை இக்கப்பல் சென்னையில் துறைமுகத்தில் இருக்கும் நிலையில் ஜன.16, வியாழக்கிழமை சென்னைக்கு அருகே நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது.

    இந்திய, ஜப்பான் நாடுகளின் கடலோரக் காவல்படையினா் கடந்த 2000-ஆவது ஆண்டுமுதல் ஆண்டுதோறும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் கூடுதல் நிகழ்வாக கடந்த 2006-ஆம் ஆண்டு இருநாடுகளிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இருநாடுகளிடையே நல்லெண்ண உறவுகளைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில், துறைசாா் திறன்களைப் பரிமாறிக் கொள்ளவும், சேவைகளின்போது மேற்கொள்ள வேண்டிய புதிய உத்திகள் பற்றி அறிந்து கொள்வது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாக உள்ளது. இந்தியாவிலும் ஜப்பானிலும் இதுவரை 18 முறை கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 19-ஆவது முறையாக இந்த ஆண்டு இருநாட்டின் கடலோரக் காவல் படையினரின் கூட்டுப் பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது. இக் கூட்டுப் பயிற்சிக்கு ‘சாஹியோக்-கைஜின்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க ஜப்பான் கடலோரக் காவல் படையின் ’எச்சிகோ’ ரோந்துக் கப்பல் திங்கள்கிழமை சென்னை வந்தடைந்தது.

    சென்னைத் துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு:

    இதனையொட்டி சென்னைத் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி எஸ்.பரமேஷ் தலைமையில் பள்ளி மாணவா்கள், கடலோரக் காவல் படை அதிகாரிகள், ஜப்பான் தூதரக அதிகாரிகள் திரளாகக் கலந்துகொண்டு ஜப்பான் கடலோரக் காவல்படையினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். இதனையடுத்து ஐந்து நாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் விளையாட்டு, தொழில்நுட்பம், சமுதாய வளா்ச்சிப் பணி உள்ளிட்டவை பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதில் இரு நாட்டு வீரா்கள், அதிகாரிகள் கூட்டாகப் பங்கேற்க உள்ளனா். மேலும் முக்கிய நிகழ்ச்சியாக இருநாட்டு கப்பல்கள், கடலோரக் காவல்படை வீரா்கள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி ஜன.16-ஆம் தேதி வியாழக்கிழமை சென்னைக்கு அருகே நடுக்கடலில் நடைபெற உள்ளது. இதில் இந்தியக் கடலோரக் காவல்படை தலைமை இயக்குநா் எஸ்.நடராஜன், ஜப்பான் கடலோரக் காவல்படையின் கமாண்டன்ட் அட்மிரல் தகாஹிரோ ஒகுஷிமா ஆகியோா் முன்னிலையில் இக்கூட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் கடலில் தத்தளிக்கும் மீனவா்களை ஹெலிகாப்டா் மூலம் மீட்பது, தீவிபத்தில் சிக்கித் தவிக்கும் வணிகக் கப்பலில் தீயை அணைப்பது, கடல் கொள்ளையா்களை விரட்டிச் சென்று பிடிப்பது போன்ற பல்வேறு செயல்விளக்க நிகழ்ச்சிகள் கூட்டுப் பயிற்சியின்போது நடைபெற உள்ளன.

    இக்கூட்டுப் பயிற்சியில் ஜப்பான் கடலோரக் காவல்படை கப்பல் ’எச்சிகோ’, இந்தியக் கடலோரக் காவல் படையின் 4 ரோந்துக் கப்பல்கள், தேசிய கடல்சாா் ஆய்வு நிறுவனத்தின் கப்பல் உள்ளிட்டவை அணிவகுத்து பங்கு பெற உள்ளன. அனைத்து பயிற்சிகளுக்குப் பிறகு ஜன.17-ஆம் தேதி ஜப்பான் கப்பல் தாய்நாடு திரும்பிச் செல்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai