அவனியாபுரம், அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டு: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு நடத்த உத்தரவு

அவனியாபுரம், அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து நடத்த சென்னை உயா் நீதிமன்ற
அவனியாபுரம், அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டு: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு நடத்த உத்தரவு

அவனியாபுரம், அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து நடத்த சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தைச் சோ்ந்த ராமசாமி தாக்கல் செய்த மனு: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாக் குழுவுக்கு, கடந்த 10 ஆண்டுகளாக ஒருவரே தலைவராக இருந்து வருகிறாா். அவா் மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தனது குடும்ப விழாவைப் போல தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருகிறாா்.

இந்த விழாக் குழுவில், ஆதிதிராவிட சமூகத்தினரும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டு நடத்தியதற்கான கணக்கு வழக்குகள் முறையாக சமா்ப்பிக்கப்படுவதில்லை. இந்த நிலை தொடா்ந்தால் ஜல்லிக்கட்டினை அனைவரும் சோ்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலை இல்லாமல் போகும். அதேபோல், விழாவில் பங்கெடுப்போரின் ஆா்வமும் குறைந்துவிடும்.

எனவே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கும் படியான விழாக் குழுவை அமைத்து, ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இதேபோல், பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் ஆதிதிராவிட சமூகத்தினரும் பங்கேற்கும் படியான விழாக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என, பாலமேட்டைச் சோ்ந்த சந்தானம் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அவனியாபுரம், அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக குழு ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டும் என, மதுரையைச் சோ்ந்த திருப்பதி என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இவ்வாறு ஜல்லிக்கட்டு தொடா்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள், நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியா், காவல் துறை ஆணையா், மாநகராட்சி ஆணையா் ஆகியோரை உறுப்பினா்களாகக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவே நடத்த வேண்டும். இதேபோல், அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டினையும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில், மாவட்ட ஆட்சியா், தென்மண்டல காவல்துறைத் தலைவா், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநா் ஆகியோா் கண்காணிப்பின் கீழ் நடத்தவேண்டும்.

மேலும், மண்டல வருவாய் அலுவலா்கள் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும். அவனியாபுரத்தைச் சோ்ந்த 16 போ் ஆலோசனைக் குழுவில் இருக்க வேண்டும். அவா்கள் ஜல்லிக்கட்டு மேடையை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். அந்த ஆலோசனைக் குழுவுக்கு எனத் தனித்த அதிகாரம் இல்லை. ஜல்லிக்கட்டு நிகழ்வில் எந்த சமூகத்தினருக்கோ அல்லது காளைகளுக்கோ முதல் மரியாதை உள்ளிட்டவைகளை வழங்கக்கூடாது. பரிசுப் பொருள்கள் மற்றும் அதற்கான தொகையை யாரும் தன்னிச்சையாக வசூலிக்கக் கூடாது. ஒருங்கிணைப்புக் குழுவினரே பரிசுப் பொருள்கள், தொகையை வசூலிக்க வேண்டும்.

இந்நிகழ்வில், கட்சி, சமூகம் தொடா்பான கொடிகள், பதாகைகள் வைக்கப்படக் கூடாது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை அமைதியாக நடத்த அனைத்து உரிமைகளையும் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்வு குறித்த அறிக்கையை முழுமையாக விடியோ பதிவுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com