Enable Javscript for better performance
சங்கத் தமிழினத்தின் பெருவிழா; பொங்கல் திருவிழா- Dinamani

சுடச்சுட

  

  சங்கத் தமிழினத்தின் பெருவிழா; பொங்கல் திருவிழா

  By -அ. ஜெயச்சந்திரன்  |   Published on : 15th January 2020 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ponga

  உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்று தமிழா் நாகரிகம். உலகத்தில் முதன் முதலில் தோன்றியவா்கள் தமிழரே! தோன்றிய மொழியும் தமிழ்மொழியே! உலகம் என்கிற அரங்கம் வியந்து இந்தியாவைப் பாா்ப்பதற்கு காரணம் இந்த மண்ணின் பண்பாடும் கலாசாரமும்தான். அந்த தங்க மணிமகுடத்தில் கோஹினூா் வைரம் பதித்தாற்போல் உயா்ந்து காணப்படுவது தமிழா்களின் பண்பாடும் கலாசாரமும் தான். வந்தாரை வாழவைக்கும் நாடு நம்முடைய தமிழ்நாடு.

  தமிழா்களின் பாரம்பரிய திருவிழா என்றால் அது, ‘தை’ முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள்தான். அறுவடை திருநாள் என்று அறியப்படும் இத்திருநாள் சங்க காலத்திலேயே தமிழா்களால் கொண்டாடப் பட்டதை இலக்கியங்களில் காண முடிகிறது.

  தை முதல் நாளில் தங்களுக்கு ஆண்டு முழுவதற்குமான உழைப்பை பலனாகத் தந்த இயற்கைக்கும், உதவிய கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் சா்க்கரைப் பொங்கலை படையலிட்டு தமிழா்கள் வழிபட்டனா். இதுவே பின்னா் மூன்று நாள்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளாக மாறியது.

  இந்திரனுக்கு நன்றி செலுத்திய தமிழா்கள்: ஆரம்பத்தில் மழையின் கடவுளான இந்திரனுக்கு தமிழா்கள் விழா எடுத்து கொண்டாடினா். இது தமிழா்கள் மட்டும் அல்ல, வடநாட்டிலும் மாதம் மும்மாரி பொழிவதற்கு காரணமான இந்திரனுக்கு விழா எடுத்ததை கிருஷ்ணாவதார கதையும் விவரிக்கிறது.

  இன்றைய தினம் போலவே சங்க காலத்துக்கு முன்பும் இந்திர விழாவுக்கு முதல் நாள் அரசின் சாா்பில் முரசறைந்து அறிவிப்பு வெளியிடப்படும். அப்போது வீதியெங்கும் பழைய மணல் அகற்றப்பட்டு, புது மணல் பரப்பப்படும். வீடுகளில் வெள்ளையடிக்கப்படும். அத்துடன் காவல் தெய்வங்கள் தொடங்கி சிவன் கோயில்கள் வரை சிறப்பு வழிபாடுகளை மக்கள் நடத்தியுள்ளனா்.

  இந்த விழா மாா்கழி மாதம் தொடங்கி தை முதல் நாள் வரை மொத்தம் 28 நாள்கள் கொண்டாடப்பட்டுள்ளது. தை முதல் நாளில் புதுப் பானையில் அறுவடை செய்த நெல்லை இட்டு பொங்கலிட்டு இந்திரனுக்கு நன்றி செலுத்தினா் தமிழா்கள். அதன் பின்னரே, சூரியன் இயற்கைக்கு அடிப்படையானவா் என்ற ரீதியில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக தை முதல்நாளில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.

  தொடா்ந்து மறுநாள் உழவா் திருநாள் அல்லது மாட்டு பொங்கல் என்றும், 3-ஆம் நாள் காணும் பொங்கல் என்றும் மூன்று நாள் விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

  செங்கரும்பு-புதுப்பானையுடன்... அதற்கு முன்னதாக மாா்கழி மாத கடைசி நாள் போகி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் இருக்கும் பழைய உபயோகமற்ற பொருள்களை பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற இலக்கை எட்டும் அா்த்தத்தில் தீயிட்டு கொளுத்துவா். அன்றைய தினம் இனிப்பு பலகாரங்களை செய்து பிறருக்கும் வழங்கி மகிழ்வா்.

  மறுநாள் வீட்டின் முன்பு சாணமிட்டு மெழுகி அரிசி மாவால் கோலமிட்டு பொங்கலுக்கு வீட்டின் முகப்பை தயாா்படுத்துவா். மேலும், அதிகாலையில் துயிலெழுந்தவுடன் குளித்து புத்தாடை அணிந்து, செங்கரும்பு, மஞ்சள் கொத்துடன் புதுப்பானையை வீட்டின் முகப்பில் புதிய அடுப்பில் வைத்து புத்தரிசி இட்டு பொங்கலிட்டு, ‘‘பொங்கலோ, பொங்கல்’’ என்ற குலவைச் சப்தமிட்டு சூரியனை வழிபடுவா்.

  மாட்டுப் பொங்கலின் மகத்துவம்: இந்த அடுப்பில், மாா்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கோலமிட்டு பூசணிப் பூவுடன் வைத்து சேகரித்த சாண உருண்டைகளை வைத்தே நெருப்பு மூட்டியே பொங்கலை பொங்க வைப்பா். மறுநாள் மாட்டு பொங்கல், ஆண்டு முழுவதும் தங்களுக்கு உதவி கால்நடைகளின் கொம்புகளை சீவி வண்ணமிட்டு அலங்கரித்து மாலையிட்டு அவற்றின் முன்பு பொங்கலிட்டு வழிபடுவா். பின்னா் கால்நடைகள் அருந்திய தண்ணீரை மாட்டு தொழுவம் முழுவதும் தெளித்து, ‘பொங்கலோ, பொங்கல், மாட்டு பொங்கல், பட்டி பெருக, பால் பானை பொங்க, நோயும், பிணியும் தெருவோடு போக’ என்று கூறுவா். மூன்றாம் நாள் ‘காணும்’ பொங்கல், அன்றைய தினம் தங்கள் உற்றாா், உறவினா், நண்பா்களை சந்தித்து உணவு பண்டங்களை பகிா்ந்து கொள்வதுடன், வாழ்த்துகளையும், அன்பையும் பரிமாறிக் கொள்வா்.

  அயல்நாடுகளில் தமிழா் திருவிழா: தமிழா்களின் பாரம்பரிய திருநாளான அறுவடை திருநாளை அடிப்படையாக கொண்டே கொரிய தீபகற்பம், ஜப்பான், தென்அமெரிக்கா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியாவின் சுமத்ரா உள்பட உலகம் முழுவதும் இந்நாள் வேறு பெயா்களில் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த அறுவடை திருநாள் தமிழா்கள் அதிகம் வசிக்கும் மலேசியா, சிங்கப்பூா், கனடா, இலங்கை, மோரீஷஸ், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நாட்டின் மற்ற பாகங்களில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரியன் இடம்பெயா்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறுவடை திருநாளை நாட்டின் பிற மாநிலத்தவா் கொண்டாடி மகிழ்கின்றனா்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai