வெறிச்சோடியது சென்னை மாநகர்!

பொங்கல் திருநாள் தொடர் விடுமுறை காரணமாக சென்னை மாநகரமே வெறிச்சோடிக் கிடக்கிறது. வீதிகளில் மக்கள்  நடமாட்டம் மிகக் குறைவாக இருக்கிறது. 
வெறிச்சோடியது சென்னை மாநகர்!

சென்னை: பொங்கல் திருநாள் தொடர் விடுமுறை காரணமாக சென்னை மாநகரமே வெறிச்சோடிக் கிடக்கிறது. வீதிகளில் மக்கள்  நடமாட்டம் மிகக் குறைவாக இருக்கிறது. வாகனப் போக்குவரத்து அறவே இல்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களே செல்கின்றன.

மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே பேருந்துகள் செல்கின்றன. இரு சக்கர வாகனங்களும் அதிகளவில் சாலைகளில் செல்லவில்லை. ஏறத்தாழ நூறு சதவிகிதமான கடைகள் மூடப்பட்டுள்ளன. மிக மிகக் குறைந்த அளவில் சில உணவகங்களும் தேநீர்க் கடைகளுமே திறந்திருக்கின்றன.

சென்னைப் புத்தகக் காட்சி நடைபெறும் நந்தனம் ஒய்எம்சிஏ திடல் பகுதியில் ஓரளவு வாசகர்கள் வந்துசெல்கின்றனர். சென்னை மாநகரின் குறிப்பிட்ட பகுதிகள் தவிர்த்து, புதிதாக உருவான குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் ஆளரவமின்றிக் காணப்படுகின்றன.

சென்னை மாநகர மக்களில் வெளியூர்களிலிருந்து தொழில், வேலை உள்பட பல்வேறு காரணங்களால் குடியேறியவர்களே பெரும்பான்மையானவர்கள். தென் மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் ஏராளம். எல்லா வகையிலும் இவர்களுக்குச் சென்னையே தங்கள் ஊராக மாறிவிட்டிருந்தாலும் பொங்கல் திருவிழாக் காலத்தில் (தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாள்கள் விடுமுறையாக இருப்பதும் முக்கிய காரணம்) சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாலும் சென்னையைச் சேர்ந்தவர்களே கூட தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களுக்கும் சுற்றுலாக்களுக்கும் சென்றுவிட்டதாலும் ஒட்டுமொத்த சென்னை மாநகரே அமைதியாக அரவமின்றிக் கிடக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறைக் காலம் என்பதால் வரும் திங்கள்கிழமை, மக்கள் எல்லாம் வெளியூர்களிலிருந்து திரும்பிய பிறகுதான் சென்னை மாநகர், தனது வழமையான பணிக்கும் பரபரப்புக்கும் திரும்பும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com