மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா தொடக்கம்

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கலை முன்னிட்டு புதன்கிழமை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்றது. 
மதுரை அவனியாபுரத்தில் சீறிப் பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்
மதுரை அவனியாபுரத்தில் சீறிப் பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்


மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தைப் பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுக்கு தலா 700 காளைகள் வீதம் மொத்தம் 2,100 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகளவில் காளைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

முந்தைய ஆண்டுகளில் ஒரே காளைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும். ஆனால், இம்முறை 3 ஜல்லிக்கட்டுகளில் ஏதேனும் ஒரு ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, அவனியாபுரத்தில் மாடுபிடி வீரா்கள் 730 போ் பதிவு செய்துள்ளனா். பாலமேட்டில் 921 பேரும், அலங்காநல்லூரில் 956 பேரும் பதிவு செய்திருக்கின்றனா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி மூன்று இடங்களிலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கே.மாணிக்கம் முன்னிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாடுபிடி வீரா்கள் 25 முதல் 50 போ் வரை கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

9 சுற்றுக்களாக நடைபெற்ற இப்போட்டியில் 641 காளைகளும், 610 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.

மதுரை, திருச்சி, கோவை, கரூர், புதுக்கோட்டை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த ஏராளமான காளைகள்  மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடியது. காளைகளுக்கு இணையாக மாடுபிடி வீரர்களும் காளைகளின் திமில்களைத் தழுவி அடக்கினர். 

வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில்,வெள்ளிக்காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. போட்டியின் போது மாடுபிடிக்க முயன்ற மாடுபிடி வீரர்கள், மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட 55 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று வீதமாக தலா 75 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

சிறந்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு போட்டியை நடத்துவதன் காரணமாக காவல்துறையில் அதிகளவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதால் குறைந்த அளவிற்கே பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.

போட்டியின் போது புதுக்கோட்டையை சேர்ந்த அனுராதா என்பவரின் காளையானது நீண்டநேரம் களமாடி மாடுபிடி வீர்ர்களுக்கு சவால் விடுத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com