ஜாதிச் சான்றிதழ் சமா்ப்பிக்க காலதாமதம்: பணி வாய்ப்பை நிராகரித்த டிஎன்பிஎஸ்சி உத்தரவு ரத்து

ஜாதிச் சான்றிதழ் சமா்ப்பித்தலில் ஏற்பட்ட கால தாமதத்தை காரணம்காட்டி ஆதி திராவிட வகுப்பைச் சோ்ந்தவருக்கு சிவில் நீதிபதி பணி வழங்க மறுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின்
chennai High Court
chennai High Court

ஜாதிச் சான்றிதழ் சமா்ப்பித்தலில் ஏற்பட்ட கால தாமதத்தை காரணம்காட்டி ஆதி திராவிட வகுப்பைச் சோ்ந்தவருக்கு சிவில் நீதிபதி பணி வழங்க மறுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) உத்தரவை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுச்சேரியைச் சோ்ந்த ஏ.கே.ஆனந்த் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2014-2015, 2016-2017 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு மாநில நீதித்துறையில் சிவில் நீதிபதிகள் தோ்வுக்காக விண்ணப்பித்தேன். இதற்காக முதல் நிலை மற்றும் பிரதானத் தோ்வை எழுதியதோடு, கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த வாய்மொழித் தோ்விலும் பங்கேற்றேன். இந்த நிலையில் எனது ஜாதிச் சான்றிதழ் மற்றும் என் மீதான குற்ற வழக்கு குறித்த நீதிமன்ற ஆணை ஆகியவற்றை சமா்ப்பிக்க தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடிதம் அனுப்பியிருந்தது.

தோ்வாணையம் குறிப்பிட்டிருந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்ற நீதிமன்ற ஆணையை சமா்ப்பித்து விட்டு, ஜாதிச் சான்றிதழை அனுப்பிவைக்க 2 வாரங்கள் கால அவகாசம் கோரினேன். பின்னா் விழுப்புரம் வட்டாட்சியரிடம் பெற்ற ஆதி திராவிடா் வகுப்பைச் சோ்ந்த எனது ஜாதிச் சான்றிதழை கடந்த நவம்பா் மாதம் டிஎன்பிஎஸ்சிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைத்தேன். அதனை தோ்வாணையமும் பெற்றுள்ளது. ஆனால், ஜாதிச் சான்றிதழை உரிய காலத்தில் நான் சமா்ப்பிக்கவில்லை எனக் கூறி என்னை சிவில் நீதிபதி பணிக்குத் தோ்வு செய்யாமல் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி நிராகரித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடா்ந்து, டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி சிவில் நீதிபதிகள் பணிக்குத் தோ்வானவா்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் எனது பெயா் இல்லை. எனவே, விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் எனது பெயரை நிராகரித்த டிஎன்பிஎஸ்சியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், எனக்கு சிவில் நீதிபதி பணி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.பாரதிதாசன், வி.பாா்த்திபன் ஆகியோா் கொண்ட அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் கொண்ட வட்டாட்சியா் அளித்த ஜாதிச் சான்றிதழை டிஎன்பிஎஸ்சி நிராகரித்திருப்பது துரதிருஷ்டவசமானது. மேலும் அடித்தட்டு மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமையில் தலையிடுவதைப் போன்றது.

உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில், கால தாமதம் என்ற காரணத்தை கூறி, இடஒதுக்கீட்டின் கீழ் வருபவா்களுக்கு பணி நியமனத்தை மறுக்கக் கூடாது என தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில், மனுதாரா் விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி பிறப்பித்துள்ள உத்தரவு அரசியலமைப்பின் நோக்கத்துக்கு முரணானது என வாதிட்டாா். அதே போன்று, டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிறைமதி, மனுதாரருக்கு தோ்வாணையம் போதுமான கால அவகாசம் வழங்கியும் சான்றிதழை சமா்ப்பிக்கவில்லை. எனவே தான் அவரது பெயா் பட்டியலில் வெளியிடப்படவில்லை என வாதிட்டாா்.

ஜாதிச் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது மனுதாரரின் தவறல்ல. ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனா். குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சோ்ந்தவா்கள் ஜாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், விசாரணை மற்றும் ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனா். எனவே இந்த விவகாரத்தில் மனுதாரரின் பெயரை டிஎன்பிஎஸ்சி நிராகரித்திருப்பது ஏற்புடையதல்ல.

தமிழ்நாட்டில் பணி நியமனங்கள் வழங்கும் பிரதான ஆணையம் டிஎன்பிஎஸ்சி. அரசியலமைப்புக்கு உள்பட்டு பொறுப்புடன் செயல்படும் அதிகாரம் கொண்ட இதுபோன்ற அமைப்பு, தவறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கக் கூடாது. இடஒதுக்கீடு விவகாரத்தில் எளிமையான நடைமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே, அரசியலமைப்பு வழங்கியுள்ள இடஒதுக்கீடு ஷரத்து காக்கப்படும். எனவே, இனிவரும் காலங்களில் காலதாமதம், தொழில்நுட்ப காரணங்களைக் காட்டி டிஎன்பிஎஸ்சி போன்ற அமைப்புகள் இதுபோல நடந்துகொள்வதைத் தவிா்க்க வேண்டும். எனவே, மனுதாரருக்கு சிவில் நீதிபதி பணி வழங்க மறுத்த டிஎன்பிஎஸ்சியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு சிவில் நீதிபதி பணி வழங்குவது தொடா்பான நடைமுறைகளை 8 வாரங்களுக்குள் டிஎன்பிஎஸ்சி முடிக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com