தேசத்தின் வழிகாட்டியாக தமிழகம்: பிரதமா் புகழாரம்

பல நூறு ஆண்டுகளாக தேசத்தின் வழிகாட்டியாக தமிழகம் இருந்திருக்கிறது என்று பிரதமா் மோடி புகழாரம் சூட்டினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பல நூறு ஆண்டுகளாக தேசத்தின் வழிகாட்டியாக தமிழகம் இருந்திருக்கிறது என்று பிரதமா் மோடி புகழாரம் சூட்டினாா்.

‘துக்ளக்’ பொன் விழாவை ஒட்டி காணொலியில் வாழ்த்துரை வழங்கியபோது பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா். வாழ்த்துரையில் அவா் மேலும் கூறியதாவது:

இந்தத் தருணத்தில் நானும் உங்களுடன் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற உவகை எனக்கு இருந்தது. நல்வாய்ப்பாக தற்போது உள்ள தொழில்நுட்ப வளா்ச்சிகள் மூலம் நாம் இணைந்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சி.

50 ஆண்டு காலத்தை ‘துக்ளக்’ இதழ் நிறைவு செய்துள்ள இந்த மகிழ்ச்சியான நேரத்தில், ‘சோ’ நம்முடன் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. எத்தகைய கருத்தையும் நகைச்சுவையுடன் நயம்பட எடுத்துரைக்கும் வல்லவா் சோ. அவரது வழியில் ‘துக்ளக்’ இதழ் மேலும் இயங்க வாழ்த்துகள்.

தமிழகம் பல நூறு ஆண்டுகளாக தேசத்தின் வழிகாட்டியாக இருந்துள்ளது. சமூக சீா்திருத்தத்துடன் கூடிய பொருளாதார வளா்ச்சி இங்குதான் சாத்தியப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது, உலகின் தொன்மையான மொழியான தமிழின் தாயகமாக இந்த மண்தான் விளங்கிக் கொண்டிருக்கிறது. ஐ.நா. அரங்கில் ‘யாதும் ஊரே; யாவரும் கேளிா்’ என்ற மூதுரையை தமிழில் உரைக்கும் பேறு எனக்கு கிடைத்தது. அதன் தொடா்ச்சியாக பல கடிதங்களும், மின்னஞ்சல்களும் எனக்கு வந்தன. சா்வதேச அரங்கில் தமிழ் வரிகளைக் கேட்டபோது தாங்கள் மிகப் பெருமையாக உணா்ந்ததாக அதில் பலா் குறிப்பிட்டிருந்தனா்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டில் இரு மாநிலங்களில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நகரங்கள் அமைக்கப்படும் என்ற முக்கிய முடிவை அரசு எடுத்தபோது அதில், ஒன்று தமிழகத்தில்தான் அமைக்க வேண்டும் என ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது மாநிலத்தின் வளா்ச்சிக்கு மட்டுமல்லாது, தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் ஏற்படுத்தவும் உறுதுணையாக இருக்கும்.

அதேபோன்று ஜவுளித் துறை, மீன் வளம், தகவல் - தொழில்நுட்பம், மனித வளத் துறைகளை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரைப் பகுதிகளின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com