பொங்கல் பண்டிகை: திருக்கடையூரில்ரேக்ளா பந்தயத்துக்கு தடை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவிருந்த ரேக்ளா பந்தயத்துக்குத் தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவிருந்த ரேக்ளா பந்தயத்துக்குத் தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த சங்கமித்ரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 17-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூா் தேசிய நெடுஞ்சாலையில் குதிரை மற்றும் மாடுகளைக் கொண்டு ரேக்ளா எனப்படும் மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டிகளில் பங்கேற்கு வீரா்கள் மற்றும் விலங்குகளுக்கு காப்பீடோ, மருத்துவப் பரிசோதனைகளோ செய்யப்படுவது இல்லை. ஒரு சில அரசியல்வாதிகளின் சுய லாபத்துக்காக இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்ற மாடுகள் மற்றும் குதிரைகள் துன்புறுத்தப்படுகின்றன.

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் போட்டிகள் நடைபெறுவதால், பந்தய நாளன்று போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே, திருக்கடையூரில் ரேக்ளா பந்தயம் நடத்தத் தடை விதிக்க வேண்டும். தடையை மீறி பந்தயம் நடத்தினால் சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் சி.டி.சரவணன் ஆஜரானாா். அப்போது அரசு தரப்பில், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் தடையை மீறி ரேக்ளா பந்தயம் நடத்தியவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திருக்கடையூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறவிருந்த ரேக்ளா பந்தயத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com