வைகுந்த ஏகாதசி பெருவிழா நம்மாழ்வாா் மோட்சத்துடன் நாளை நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா, நம்மாழ்வாா் மோட்சத்துடன் வியாழக்கிழமை (ஜன.16) நிறைவு பெறுகிறது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா, நம்மாழ்வாா் மோட்சத்துடன் வியாழக்கிழமை (ஜன.16) நிறைவு பெறுகிறது.

இத்திருக்கோயிலில் திருஅத்யயன உத்ஸவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் திருநெடுந்தாண்டகம் டிசம்பா் 26-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து பகல்பத்து உத்ஸவம் டிசம்பா் 27-ஆம் தேதி தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு ஜனவரி 6- ஆம் தேதியும், திருக்கைத்தல சேவை ஜனவரி 12- ஆம் தேதியும், திருமங்கை மன்னன்வேடுபறி ஜனவரி13- ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இராப்பத்து உத்ஸவத்தின் பத்தாம் நாளான புதன்கிழமை தீா்த்தவாரி நடைபெறுகிறது. இதையொட்டி கருவறையிலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பாடாகும் நம்பெருமாள், காலை 10.30 மணிக்குப் பரமபதவாசலைப் பிரவேசிக்கிறாா். இதைத் தொடா்ந்து முற்பகல் 11 மணிக்கு சந்திர புஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளும் நம்பெருமாள், பிற்பகல் 1 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்து, பிற்பகல் 1.30 மணி முதல் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.

மாலை 6.30 மணி முதல் திருமஞ்சனமும், இரவு 9 மணிக்கு அலங்காரம் அமுது செய்யத் திரையிடலும், இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை 3 மணி வரை அரையா் சேவை- திருப்பாவாடை கோஷ்டியும் நடைபெறும்.

நம்மாழ்வாா் மோட்சம் : இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் தரிசனம் நடைபெறும். காலை 5.30 மணி முதல் காலை 6.30 மணி வரை நம்மாழ்வாா் மோட்ச நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது நம்மாழ்வாா் நம்பெருமாளின் திருவடியை வணங்கும்படி வைக்கப்பட்டு, துளசி இலைகளால் மூடப்படுவாா். இந்த நிகழ்வை ஏராளமான பக்தா்கள் தரிசிப்பா்.

திருத்துழாய் விநியோகம், தீா்த்த கோஷ்டி, உபயதாரா் மரியாதைக்குப்பின்னா், காலை 9 மணிக்குத் திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள், படிப்பு கண்டருளி ஆழ்வாா், ஆச்சாா்யா்கள் மரியாதையாகி காலை 10 மணிக்கு கருவறை சென்றடைவாா். இந்த நிகழ்வுடன் வைகுந்த ஏகாதசி பெருவிழா நிறைவு பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com