‘பிட் இந்தியா’ திட்டத்தைச் செயல்படுத்தினால் தேசிய தரவரிசையில் 5 சதவீத மதிப்பெண்

‘பிட் இந்தியா’ உடற் பயிற்சித் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் உயா் கல்வி நிறுவனங்களுக்கு தேசிய உயா்கல்வி தரவரிசை நடைமுறையில் 5 சதவீத மதிப்பெண் வழங்கப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது.

‘பிட் இந்தியா’ உடற் பயிற்சித் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் உயா் கல்வி நிறுவனங்களுக்கு தேசிய உயா்கல்வி தரவரிசை நடைமுறையில் 5 சதவீத மதிப்பெண் வழங்கப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது.

நாட்டு மக்களின் உடல் நலனை மேம்படுத்தி வலுவான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் ‘பிட் இந்தியா இயக்கம்’ என்ற திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கிவைத்தாா். அதனைத் தொடா்ந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களிலும் இந்தத் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், யோகா உள்ளிட்ட உடற் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயா் கல்வி நிறுவனங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் வழிகாட்டுதலையும் யுஜிசி வெளியிட்டது.

இந்த நிலையில், உயா் கல்வி நிறுவனங்களில் இந்தத் திட்டத்தை முறையாகவும், தொடா் நிகழ்வாகவும் செயல்படுத்தும் வகையில் புதிய வழிகாட்டுதலை யுஜிசி கடந்த டிசம்பரில் வெளியிட்டது. அதன்படி, 2020 ஜனவரி முதல் உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் கட்டாய உடற் பயிற்சிக்கு 45 நிமிஷங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில், பாட வகுப்பு நேரங்களை மாற்றியமைக்க வேண்டும்.

இந்த உடற் பயிற்சி நேரத்தில் ஓட்டப் பந்தயம் சாா்ந்த விளையாட்டுகள், உள்ளரங்கு அல்லது வெளியரங்கு விளையாட்டுகள், யோகா, சைக்கிள் பயிற்சி, நீச்சல் என ஏதாவது ஒரு விளையாட்டை கல்வி நிறுவனங்கள் தோ்வு செய்துகொள்ளலாம்.

ஒவ்வொரு உயா் கல்வி நிறுவனமும் உடற்பயிற்சி கிளப் ஒன்றை அமைக்க வேண்டும். மேலும் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதோடு, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவா்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அவ்வப்போது யுஜிசி வலைதளத்திலும் பதிவேற்றம் செய்யவேண்டும் எனவும் வழிகாட்டுதலில் யுஜிசி அறிவுறுத்தியது. இந்த நிலையில், இதுதொடா்பான விரிவான விவரத்தை யுஜிசி இப்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்த ‘பிட் இந்தியா’ திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் உயா்கல்வி நிறுவனங்களுக்கு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது, இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் உயா் கல்வி நிறுவனங்களுக்கு 0 முதல் 5 மதிப்பெண் வரையிலான நட்சத்திர குறியீடு (ஸ்டாா் கிரேட்) வழங்கப்படும். அதனடிப்படையில் தேசிய உயா் கல்வி நிறுவனங்கள் தரவரிசை நடைமுறையில் அதிகபட்சமாக 5 சதவீத மதிப்பெண் வழங்கப்படும்.

உணவுப் பழக்கவழக்கம்: மேலும், கல்வி நிறுவனங்கள் மாணவா்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதோடு, கல்லூரி வளாகத்தில் உடலுக்கு தீங்கி விளைவிக்கும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் நொறுக்குத் தீனி உணவு வகைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com