ஈரோட்டை கலக்கிய ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்களைத் தெறிக்க விட்ட காளைகள்

ஈரோட்டில் இரண்டாவது முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஏராளமான மாடு பிடிவீரர்கள்,
ஈரோட்டை கலக்கிய ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்களைத் தெறிக்க விட்ட காளைகள்

ஈரோட்டில் இரண்டாவது முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஏராளமான மாடு பிடிவீரர்கள், காளைகள் பங்கேற்றன. இதை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.
 
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றது. ஈரோட்டில் 2ம் ஆண்டாக இந்தாண்டு ஈரோடு அடுத்துள்ள பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏஈடி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. காலை 8.30 மணிக்குத் தொடங்கிய இப்போட்டிகளை தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், ஆட்சியர் சி.கதிரவன், எஸ்.பி. சக்தி கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

முன்னதாக கோயில் காளைகள் வாடிவாசலுக்குக் கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடத்தித் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாடிவாசலிலிருந்து ஒவ்வொரு காளையாக அனுப்பப்பட்டது. மொத்தம் 322 ஜல்லிக்கட்டு காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு சுற்றாக மொத்தம் 3 சுற்றுகளாக மாடுபிடி வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் சுற்றில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு அடுத்த சுற்றிலும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் இரண்டு சுற்றுகளில் காளைகளை அடக்க முயன்ற வீரர்களைக் காளைகள் தெறிக்கவிட்டன. 

முதல் சுற்றில் பெரும்பாலும் காளைகளே வெற்றி பெற்றன. காளைகளின் உரிமையாளர்களுக்கு ஏராளமான பரிசுகள் குவிந்தன. இரண்டாவது சுற்றுக்குப் பிறகு மாடுபிடி வீரர்களின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது. 3வது சுற்றின் போது மாடுபிடி வீரர்கள் அடுத்தடுத்து பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடு பிடிவீரர்களுக்கு கிப்ட்பேக், கிரைண்டர், மிக்ஸி, சோபாசெட், செல்போன், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், ரொக்கம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. 

தென்மாவட்டங்களில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த ஜல்லிக்கட்டு ஈரோட்டிலும் நடத்தப்பட்டதால் வாடிவாசல் முன்பாக இருபக்கமும் அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் கேலரிகளில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து கண்டு களித்தனர். நேரம் செல்லச்செல்ல பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து தடுப்புகள் முன்பாக வரிசையில் நின்று ஜல்லிக்கட்டினை பார்த்து மகிழ்ந்தனர். பாதுகாப்பு பணியில் 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் 20 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து காளைகளும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. இதே போல மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். மாடுகள் முட்டி காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க 10 மருத்துவக் குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. 

விதிமீறல்கள் மற்றும் பாதுகாப்பினை கண்காணிக்க ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம், நுழைவுவாயில் உள்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கட்டுப்பாடு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டன. போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பரிசளிப்பு விழாவில் ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பரிசுகளை வென்ற காளையர்கள், காளைகள்:

ஈரோடு ஜல்லிக்கட்டில் சிறந்த வீரராக மதுரை அடுத்துள்ள கருப்பாயூரணியை சேர்ந்த அஞ்சான் கார்த்தி(20) என்கிற கார்த்தி என்ற வீரர் மொத்தம் 14 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பெற்றார். இவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை 11 மாடுகளை அடக்கிய திண்டுக்கல் நத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கு பிரிட்ஜ், 8 காளைகளை அடக்கிய நாமக்கல் காரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த சபரி என்பவருக்கு டிரசிங்டேபிள் வழங்கப்பட்டது. 

இதில் முதல் இடம் பெற்ற கார்த்தி கடந்தாண்டில் ஈரோட்டில் நடந்த ஜல்லிக்கட்டிலும் முதலிடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் சிவகங்கை கிருங்காகோட்டையை சேர்ந்த தவமணி என்பவரின் காளை முதலிடத்தை பெற்றதையடுத்து ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டது. 

இரண்டாம் இடத்தை திருச்சி மணப்பாறை ராஜா என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டு பீரோ, மூன்றாம் பரிசாக உளிப்புரம் ராஜா என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டு சோபாசெட் பரிசாக வழங்கப்பட்டது. 

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன் கூறியதாவது:

ஈரோட்டில் நடந்த ஜல்லிக்கட்டில், ஒவ்வொரு காளையும், ஒவ்வொரு வீரரும் உரிய மருத்துவ பரிசோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம், 328 மாடுகள் வந்ததில், வயது குறைவு, காயம், உயரம் குறைவு போன்ற காரணத்தால், ஆறு மாடுகள் மட்டும் அனுமதிக்கவில்லை. மீதமுள்ள, 322 மாடுகள் பங்கேற்றன. மாடுகளுக்கு சிறிய அளவிலான காயம் மட்டுமே ஏற்பட்டது. அவற்றுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்கி, உரிமையாளர்களால் அழைத்துச் செல்லப்பட்டது.

அதுபோல் 225 வீரர்கள் பதிவு செய்து, மருத்துவ பரிசோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், நான்கு பேட்ஜாக, ஒவ்வொரு பேட்ஜிலும் தலா, 50 பேர் அனுமதித்தோம். மாடுகளை பிடித்த வீரர்களுக்கு மட்டும், அடுத்த பேட்ஜில் விளையாடச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. மொத்தம், ஐந்து வீரர்கள் மட்டும் லேசான காயம் அடைந்தனர். அதில், ஒருவருக்கு மட்டும் மாடு மிதித்ததால், உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததால் நலமுடன் உள்ளார்.

அனுமதித்த நேரத்துக்குப்பின் வந்த, 15 மாடுகளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. தவிர, நீதிமன்ற உத்தரவுப்படி, 2 மணிக்குள் நிறைவு செய்யும் வகையில் விரைவாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
திருப்பூரிலிருந்து விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் இருவர், முழுமையாக ஜல்லிக்கட்டைப் பார்த்து, விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவதை உறுதி செய்தனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com