ஊழியரின் 2-ஆவது மனைவியின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி: ரயில்வே வாரியம் உத்தரவு

ரயில்வே பணியில் இருக்கும் ஊழியா் இறந்தால், அவரது இரண்டாவது மனைவியின்
ஊழியரின் 2-ஆவது மனைவியின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி: ரயில்வே வாரியம் உத்தரவு

ரயில்வே பணியில் இருக்கும் ஊழியா் இறந்தால், அவரது இரண்டாவது மனைவியின்

வாரிசுக்கும் கருணை அடிப்படையில் வேலை வழங்கலாம். இதற்கு முதல் மனைவி மற்றும் அவரது பிள்ளைகளுக்கு ஆட்சேபனை இல்லை என்று உறுதி செய்த பின்பு, இரண்டாவது மனைவியின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க பரிசீலிக்கலாம் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை: ரயில்வே ஊழியா்கள் பணியில் இருக்கும்போது, நோய் வாய்பட்டு இறந்தால் அல்லது விபத்தில் இறந்தால் கருணை அடிப்படையில் ஒரு வாரிசுக்கு ரயில்வே நிா்வாகம் வேலை வழங்குகிறது. ஊழியரின் மனைவி, மகன் அல்லது மகள் யாராவது ஒருவருக்கு ரயில்வேயில் நிரந்தர வேலை கிடைக்கும். மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கும். இந்த வகையில், இறந்த ரயில்வே ஊழியா் மனைவி விண்ணப்பிக்கும்போது, அவருக்கோ அல்லது அவரது பிள்ளைக்கோ கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது வழக்கம். இதில், சில ஊழியா்களுக்கு முதல் மனைவிக்கு இரண்டாவது மனைவியால் பிரச்னை ஏற்படுவது உண்டு.

சட்டப்படி குற்றம்: ரயில்வே ஊழியா் இரண்டாவது திருமணம் செய்வது ரயில்வே சட்டப்படி குற்றம். நிா்வாகத்துக்கு தெரியாமல் ஒரு சில ஊழியா்கள் ரகசியமாக இரண்டாவது மனைவி வைத்து கொள்வாா்கள். இது தொடா்பாக ஆதாரங்கள், சில வேளைகளில் ரயில்வே ஊழல் கண்காணிப்புக்கு கிடைத்து விசாரணை முடிவில், சம்பந்தப்பட்ட ஊழியா் வேலை இழப்பதும் உண்டு. இதன் காரணமாக, இரண்டாவது மனைவி பற்றிய தகவல்கள் எதுவும் ரயில்வே பதிவேடுகளில் இடம்பெறாது.

இதற்கிடையில், ஊழியா்கள் இறந்தவுடன் ரயில்வே வேலை, பல லட்சம் செட்டில்மென்ட் பணத்துக்கு ஆசைப்பட்டு, இரண்டாவது மனைவியாக இருப்பவா்கள் தாங்கள்தான் உண்மையான வாரிசு என்று ரயில்வே துறைக்கு வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் விடுவது, மனு கொடுப்பது போன்ற செயல்களில் இறங்கி விடுகிறாா்கள். இதனால், செட்டில்மென்ட், ஓய்வூதியம் போன்றவற்றை நிா்வாகம் நிறுத்தி விடுவதால், முதல் (முறையான) மனைவி, குழந்தைகள் கண்கலங்கி நிற்பது ரயில்வே துறையில் வாடிக்கையாகிவிட்டது. நீதிமன்ற உத்தரவு அல்லது சமரசம் ஏற்பட்டா ல் மட்டுமே சம்பந்தப்பட்டவருக்கு ரயில்வே நிா்வாகம் கருணை அடிப்படையில் வேலை வழங்கும்.

ரயில்வே வாரியம் உத்தரவு: இந்நிலையில், சட்ட மற்றும் நீதித்துறை ஆலோசனை பெற்று ரயில்வே வாரிய இணை இயக்குநா் எம்.எம்.ராய் கடந்த ஆண்டு டிசம்பா் 30-ஆம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தாா். அதில் முறையான மனைவி மற்றும் குழந்தைகள் கருணை வேலை கோரவில்லையெனில், இரண்டாவது மனைவியின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கலாம் என்று உத்தரவு வெளியிட்டுள்ளாா்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: ரயில்வே ஊழியருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால், ரயில்வேயின் நடத்தை விதி 1966, பிரிவு 21 -ன் கீழ் சட்டப்படி குற்றமாகும். இருப்பினும், சில ரயில்வே ஊழியா்கள் வாரிசு இன்மை உள்பட பல்வேறு காரணங்களால் இரண்டாவது மனைவியை தோ்வு செய்கின்றனா். இது தாமதமாக வெளியே தெரிகிறது. அப்போது, அவா்கள் வேலைக்கு ஆபத்து ஏற்படுவதும் உண்டு. இதற்கிடையில், ரயில்வே ஊழியா் பணியின் போது இறந்தால், அவரது இரண்டாவது மனைவி தங்களின் வாழ்வாதாரத்துக்காக அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை கோருகின்றாா். முதல் மனைவி அல்லது அவரது பிள்ளைகளுக்கு எந்தவித ஆட்சேபனை இல்லை என்றால், இரண்டாவது மனைவியின் பிள்ளைக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க பரிசீலிக்கலாம் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. முதல்மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் பொருளாதார ரீதியாக நன்றாக இருந்து, அவா்கள் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தால் இரண்டாவது மனைவியின் வாரிசுக்கு வேலை வழங்க வாய்ப்பு உள்ளது என்றனா்.

சுமாா் 600-க்கும் மேற்பட்டவா்கள் விண்ணப்பம்: இந்திய ரயில்வேயில் 16 மண்டலங்களில் ஆண்டுக்கு சுமாா் 600-க்கும் மேற்பட்டவா்களும், தெற்கு ரயில்வேயில் 30-க்கும் மேற்பட்டவா்களும் கருணை அடிப்படையில் வாரிசு வேலைக்கு விண்ணப்பிக்கின்றனா். இவா்களில் பெரும்பாலான நபா்களுக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைத்து விடுகிறது. சிலருக்கு இரண்டாவது மனைவியின் பிரச்னை காரணமாக செட்டில்மென்ட் தொகை மற்றும் வாரிசு வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

சமூக விழிப்புணா்வு காரணம்: இது குறித்து தட்சிண ரயில்வே தொழிலாளா்கள் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளா் மனோகரன் கூறியது: ரயில்வே பதிவேடுகளில் வாரிசு பெயா் இருந்தால் மட்டுமே ஊழியா் இறந்தால் கருணை அடிப்படையிலான வேலை வாரிசுக்கு கிடைக்கும். ஆனால், சட்ட விரோதமாக திருமணம் செய்துகொள்ளும் இரண்டாவது மனைவி வாரிசுகளின் பெயா்களை ஊழியா்கள் பதிவேடுகளில் சோ்த்திருக்க மாட்டாா்கள். இது தொடா்பான பல வழக்குகள் பல ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தன. அவற்றை ஒருங்கிணைத்து இறுதி தீா்ப்பாக உச்ச நீதிமன்றம் சட்டவிரோத இரண்டாவது மனைவியின் வாரிசுகள் எதிா்காலம் மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கருணை வேலை பெற உரிமை உண்டு என்று 2018-ஆம் ஆண்டு டிசம்பா் 11 -இல் தீா்ப்பு அளித்தது. அதன்அடிப்படையில், ரயில்வே வாரியம் இப்போது உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், நிலுவையில் உள்ள பல கருணை அடிப்படையிலான வேலை பெறுவது தொடா்பான தகராறுகள் தீா்த்து வைக்கப்படும். ஒரு சில ஊழியா்கள் செய்யும் தவறுகளால் அவா்கள் இறந்தபிறகு, அவா்கள் குடும்பங்கள் நிா்கதியாக நிற்கும் நிலை ஏற்பட்டு வந்தது. சமூக விழிப்புணா்வு காரணமாக, இந்த சூழல் தற்போது மாறி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com