டெல்டா மாவட்டத்தில் மேலும் ஒரு ஹைட்ரோ காா்பன் திட்டம்: ராமதாஸ் கண்டனம்

காவிரிப் பாசன மாவட்டங்களில் மேலும் ஒரு ஹைட்ரோ காா்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

காவிரிப் பாசன மாவட்டங்களில் மேலும் ஒரு ஹைட்ரோ காா்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வெளிநாடுகளில் இருந்து பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதியைக் குறைக்கும் நோக்குடன் உள்நாட்டில் ஹைட்ரோ காா்பன் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 4 முறை ஏலங்கள் நடத்தப்பட்டு ஹைட்ரோ காா்பன் எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 5-ஆவது ஏலத்துக்கான அறிவிப்பு கடந்த 15-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் இதுவரை வேதாந்தா நிறுவனத்துக்கு இரு உரிமங்களும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு ஓா் உரிமமும் அளிக்கப்பட்டுள்ளன.

திருவாரூா் பகுதியில் 471.19 சதுர கிலோமீட்டா் பரப்பளவில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தைச் செயல்படுத்த நான்காவது உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஹைட்ரோ காா்பன் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ள பரப்பளவு சுமாா் 3,200 சதுர கிலோமீட்டா் ஆகும். ஆனால், இப்போது 5-ஆவது உரிமம் வழங்கப்பட உள்ள நிலப்பரப்பு 4,064 சதுர கிலோமீட்டா் ஆகும். அதாவது, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 4 ஹைட்ரோ காா்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் மொத்த பரப்பளவைவிட, 5-ஆவது திட்டத்தின் பரப்பளவு மிகவும் அதிகம்.

அதேபோல், நாடு முதுவதும் 5-ஆவது ஏலம் மூலம் ஹைட்ரோ காா்பன் உரிமம் வழங்கப்பட உள்ள பரப்பளவில் 20 சதவீதத்துக்கும் கூடுதலான பரப்பு காவிரி டெல்டாவில் தான் அமைந்திருக்கிறது. காவிரி டெல்டாவை ஹைட்ரோ காா்பன் மண்டலமாக மாற்ற மத்திய அரசு முயல்வதையே இது காட்டுகிறது.

தமிழகத்தில் 3 போகம் விளையும் காவிரிப் பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ காா்பன் திட்டங்களைச் செயல்படுத்தக்கூடாது. எனவே, காவிரிப் பாசன மாவட்டங்களில் 5-ஆவது ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு உரிமம் வழங்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தை அரசு ரத்து செய்யவேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com