வாழப்பாடி அருகே தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு: ரூ.55,000 அபராதம் விதிப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையத்தில் வனத்துறை தடையை மீறி சனிக்கிழமை வங்காநரி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 
வாழப்பாடி அருகே தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு: ரூ.55,000 அபராதம் விதிப்பு


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையத்தில் வனத்துறை தடையை மீறி சனிக்கிழமை வங்காநரி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி வனத்துறையினர், கிராம மக்களிடம் இருந்து வங்காநரியை கைப்பற்றி கொட்டவாடி வனப்பகுதியில் விட்டனர். வங்காநரியை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தியதற்காக, வனத்துறையினர் ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஒரு சில கிராமங்களில், 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் இறுதிநாளான காணும் பொங்கலன்று, கிராமத்தையொட்டிய குன்று, கரடுகள் மற்றும் புறம்போக்கு தரிசு நிலங்களில் வலையோடு முகாமிடும் கிராம மக்கள் வங்காநரிகளை பிடிக்கின்றனர்.

‘நரி’முகத்தில் விழித்தால் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையால், மேள வாத்தியத்தோடு வங்கநரியை கிராமத்திற்கு கொண்டு சென்று, முன்னோர்கள் வழியில் நரியின் காலில் கயிற்றை கட்டி, கோவில் மைதானத்தில் ஓடவிட்டு மக்களை நரி முகத்தில் விழிக்க செய்கின்றனர்.

நரியாட்டம், வங்காநரி ஜல்லிக்கட்டு என குறிப்பிடப்படும் இவ்வினோத விழா சின்னமநாயக்கன்பாளையம், ரங்கனூர், கொட்டாவடி, பெரியகிருஷ்ணாபுரம், மத்தூர், தமையனூர், வடுகத்தம்பட்டி, உள்ளிட்ட சில கிராமங்களில் இன்றளவும் மரபு மாறாமல் நடைபெற்று வருகிறது.

வங்காநரி வனவிலங்கு பட்டியலில் உள்ளதால், இந்த நரியை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வனத்துறை தடை விதித்தது. இருப்பினும், முன்னோர்கள் வழியாக தொடர்ந்து வரும் பாரம்பரிய விழாவான வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்துவதை கைவிட மனமில்லாத வாழப்பாடி பகுதி கிராம மக்கள், வங்காநரியை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தி வருவதோடு, வனத்துறையினர் வழக்கு பதிந்தால் அதற்கான அபராதத்தொகையையும் செலுத்தி வந்தனர்.

இந்நிலையில், நிகழாண்டு தடையை மீறி வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்தது. இதுமட்டுமின்றி, கிராமங்கள் தோறும் துண்டு பிரசுரம் விநியோகித்தும், சுவரொட்டிகள் ஒட்டியும் எச்சரிக்கை விடுத்தனர்.

இருப்பினும், வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் தெய்வக்குற்றம் ஏற்படுமென்பதால் சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள், வனத்துறை தடையை மீறி, சனிக்கிழமை அதிகாலை கொட்டவாடி  கரடு புறம்போக்கு நிலப்பகுதியில் வலைவிரித்து வங்காநரி பிடித்தனர். ஆரவாரத்தோடு மாரியம்மன் கோவில் சன்னதியில் நரியை ஓடவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி வனத்துறையினர் விரைந்து சென்று வங்காநரியை கைப்பற்றி கொட்டவாடி வனப்பகுதியிலேயே விட்டனர்.

தடையை மீறி வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தியதாக வழக்கு பதிவு செய்த வாழப்பாடி வனத்துறையினர், வங்காநரி பிடித்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலா ரூ 5,000 வீதம் மொத்தம் ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com