
கோப்புப்படம்
ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத விதிக்கு எதிராக பிரதமருக்குக் கடிதம் எழுதி, முதல்வர் பழனிசாமி கடித நாடகம் நடத்தியிருப்பதாக மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகளைத் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியும், மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதையடுத்து, இந்தத் திட்டத்துக்கு எதிராக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று மாலை கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் மக்கள் கருத்துகளைக் கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும், மக்களின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து முகநூலில் விமரிசனம் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிடுகையில்,
"ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என்ற மத்திய அரசின் மக்கள் விரோத விதிக்கு எதிராக ‘அதிசயமாய்’ பிரதமருக்குக் கடிதம் எழுதி, கடித நாடகம் நடத்தியிருக்கிறார் முதல்வர்.
“நீட்“ விலக்கு கோரி இரண்டு முறை அனுப்பப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களையும் பொருட்படுத்தாத பிரதமர், இவரது கடிதத்துக்கா செவி சாய்ப்பார்?
ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் தமிழக அரசின் நிலையை விளக்கி, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றத் தைரியம் உண்டா? அதை விடுத்து, கடிதம் எழுதி பிரதமரிடம் மண்டியிடுவதால் எந்த விதப் பயனும் ஏற்படாது." என்றார்.