தனியார் பால் விலைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

தனியார் பால் விலைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை: தனியார் பால் விலைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. தனியார் பால் விலை ஏற்கனவே மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், மீண்டும் ஒரு முறை பால் விலையை உயர்த்துவது மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும். இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அதிக அளவில் பால் வினியோகிக்கும் 3 தனியார் நிறுவனங்களும் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் பால் விலையை உயர்த்தியுள்ளன. இந்த நிறுவனங்கள் விற்பனை செய்யும் ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பாலின் (3% கொழுப்பு) விலை 48 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பாலின் (4.5% கொழுப்பு) விலை 52 ரூபாயிலிருந்து 56 ரூபாயாகவும், செறிவூட்டப்பட்ட பாலின் (6% கொழுப்பு) விலை 60 ரூபாயிலிருந்து 62 ரூபாயாகவும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 3 முறை பால் விலையை உயர்த்திய தனியார் நிறுவனங்கள், இந்த ஆண்டின் முதல் மாதத்திலேயே பால் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன.

பால் தட்டுப்பாடு, கொள்முதல் விலை உயர்வு, நிர்வாகச் செலவு உள்ளிட்ட காரணங்களால் தான் பால் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவும், இது தவிர்க்க முடியாதது என்றும் தனியார் நிறுவனங்கள் கூறியுள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும். தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் தரமான பாலை ஆவின் நிறுவனம் வழங்குகிறது. தனியார் நிறுவனங்களை விட பொதுத்துறை நிறுவனமான ஆவினின் நிர்வாகச் செலவு மிகவும் அதிகமாகும். ஆனாலும், ஆவின் ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ. 43, நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.47, செறிவூட்டப்பட்ட பால் ரூ.51 என்ற விலையில் விற்பனை செய்கிறது. அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ. 3 வரை  தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே விலையை உயர்த்தியது. ஆவின் பால் விலை தனியார் பால் விலையை விட லிட்டருக்கு ரூ.11 வரை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனங்களின் விற்பனை விலையை விட குறைந்த விலைக்கு பால் விற்பனை செய்ய முடியும் என்பதைத் தான் இது காட்டுகிறது. ஆனாலும், தனியார் நிறுவனங்கள் தான் தமிழகத்தின்  ஒட்டுமொத்த பால் தேவையில் சுமார் 80 விழுக்காட்டை பூர்த்தி செய்கின்றன என்பதால் அவை அனைத்தும் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு பால் விலையை உயர்த்திக் கொண்டே செல்கின்றன. தனியார் நிறுவனங்களின் அநியாயமான பால்விலை உயர்வை கட்டுப்படுத்தும் கடமை அரசுக்கு உண்டு.

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், சந்தையில்  ஒரு நிறுவனமோ, ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களோ ஏகபோகம் செலுத்துவதை முறியடிக்க வேண்டும் என்பது தான் அடிப்படை ஆகும். அதே பணியை பால் சந்தையில் ஆவின் நிறுவனமும் செய்ய வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக ஆவின் நிறுவனத்தின் சந்தை பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்பதால் தான் தனியார் பால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

எனவே, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் தேவையில் குறைந்தது 50 விழுக்காட்டையாவது பூர்த்தி செய்யும் அளவுக்கு ஆவின் நிறுவனத்தின் சந்தைப் பங்கை உயர்த்த வேண்டும். உடனடித் தேவையாக தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அந்த நிறுவனங்களின் பால் விலை உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com