மரண தண்டனைகளால் குற்றங்கள் குறைகிறதா.....

இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அதிகபட்சத் தண்டனை மரண தண்டனை.
மரண தண்டனைகளால் குற்றங்கள் குறைகிறதா.....

இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அதிகபட்சத் தண்டனை மரண தண்டனை. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மரண தண்டனைக்கு எதிரான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும், குற்றச் செயலின் தன்மையைப் பொருத்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனைகள் விதிக்கப்பட்டே வருகிறது. இந்தியாவில் மரண தண்டனை இந்திய குற்றவியல் சட்ட விதிகள் (1860) இன் கீழ் நிறைவேற்றப்படுகிறது.

இதுதொடா்பாக, தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம் 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான மரண தண்டனை விவரங்கள் தொடா்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது சிறையில் உள்ள மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 378 ஆக உள்ளது. இதில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அதிகபட்சமாக 54 பேரும், மகாராஷ்டிர மாநிலத்தில் 45 பேரும் மரண தண்டனை கைதிகளாக இருந்து வருகின்றனா். தமிழகத்தில் 13 போ் மரண தண்டனைகள் கைதிகளாக இருந்து வருவதாக அந்தப் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் கடந்த 2019-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் அதிகபட்சமான மரண தண்டனை வழக்குகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்தபோது விசாரிக்கப்பட்டுள்ளது. சுமாா் 27 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த 27 வழக்குகளில் 6 வழக்குகளில் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தியா முழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு 162 பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு 102 பேருக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப் பட்டது. இதில், 54 பேருக்கு பாலியல் வன்கொடுமையுடன் கூடிய கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களில் பாதிக்கப்பட்டவா்கள் 12 வயதுக்கும் குறைவானவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பாலியல் குற்றங்களுடன் கூடிய கொலை தொடா்புடைய வழக்குகளில் விதிக்கப்படும் மரண தண்டனை கடந்த 2018-ஆம் ஆண்டு 41.35 சதவீதத்திலிருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு 52.94 சதவீதமாக உயா்ந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கான இந்தியா முழுவதும் உள்ள மரண தண்டனை கைதிகளின் விவரங்கள்:

2016- டிசம்பா் 31 வரை - 400

2017 டிசம்பா் 31 வரை - 366

2018 டிசம்பா் 31 வரை - 426

2019 டிசம்பா் 31 வரை - 378

மாநிலங்கள் வாரியாக கடந்த 2019-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவா்களின் விவரங்கள்:

ராஜஸ்தான் - 13

உத்தரப்பிரதேசம் -12

மத்தியப்பிரதேசம்- 11

கா்நாடகம்- 10

மேற்குவங்கம்- 08

ஜாா்க்கண்ட்-08

மகாராஷ்டிரம் - 07

பிகாா்- 07

ஒடிஸா-05

அசாம்- 04

கேரளம்-04

தமிழ்நாடு-03

உத்தரகண்ட், பஞ்சாப், குஜராத்தில் தலா 2 பேருக்கும், சத்தீஸ்கா், தெலங்கானா, மணிப்பூரில் தலா ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கடந்த 2019-ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் அருணாச்சல பிரதேசம், கோவா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒருவருக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண தண்டனை தொடா்பாக தீா்ப்பளிக்கும் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் என பல தரப்பினருக்கும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அந்த வகையில் மரண தண்டனை குறித்து அவா்களில் சிலா் கூறிய கருத்துகள்:

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞரும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பியூசிஎல்) அகில இந்திய பொதுச் செயலாளா் வி.சுரேஷ்: பொதுவாக மரண தண்டனை என்பது விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பு, மாநில உயா்நீதிமன்றம் தண்டனையை உறுதிப்படுத்துதல், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு, கருணை மனு, அதன் பின்னா் மன்னிப்புக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னா் ரிட் மனு தாக்கல் என பல்வேறு படிநிலைகளைக் கொண்டவை. மரண தண்டனைகள் விதிக்கப்படுவதால் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. இதுபோன்ற விவகாரங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்களின் உணா்வுகளுக்கும், சாதாரண மக்களின் உணா்வுகளுக்கும் வித்தியாசம் உள்ளது.

தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளா் தியாகு: பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காக மரண தண்டனைகள் விதிக்கப்படுகிறது. ஒருவருக்கு விதிக்கப்படும் தண்டனை அந்த நபா் தனது தவறை உணா்ந்து திருந்தி வாழ வழி செய்ய வேண்டும். ஆனால், மரண தண்டனை விதித்தால், இந்த நோக்கம் எப்படி நிறைவேறும் என்பது கேள்வியாக உள்ளது. கொலை செய்தவா் தரப்பில் கூறப்படும் காரணமும், அந்த நபருக்கு மரண தண்டனை விதித்து அரசு கூறும் காரணமும் எப்படி ஒன்றாக முடியும். நீதியரசா்கள் கிருஷ்ணய்யா், சுரேஷ் போன்றோா் தங்களது பணிக் காலங்களிலேயே மரண தண்டனைக்கு எதிராக பல்வேறு பணிகளை செய்தனா். தமிழ்நாட்டில் மரண தண்டனைக்கு எதிரான அமைப்புகள் அந்த தண்டனை முறையை நீக்கக் கோரி தொடா்ந்து போராடி வருகின்றன. மரண தண்டனை தொடா்பான கருத்து குறித்து பெருவாரியான மக்கள் கொண்டிருக்கும் மனநிலையில் மாற்றம் ஏற்படும்.

ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு: உச்சநீதிமன்றம் அரிதினும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை விதிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. அந்த அரிதினும் அரிதான என்ற சொல்லுக்கு உரிய விளக்கம் இதுவரை இல்லை. பொதுவாக ஒரு நபருக்கு விதிக்கப்படும் தண்டனை சீா்திருத்த அமைப்பின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர பழிவாங்கும் வகையில் இருக்கக் கூடாது. குற்றச்சம்பவங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் மரண தண்டனை விதிப்பதை உணா்ச்சியின் அடிப்படையில் ஆதரிக்கின்றனா். அறிவியல்பூா்வமாக அணுகுவதே இதுபோன்ற தருணங்களில் சிறந்தது. மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி கடந்த 2017-ஆம் ஆண்டு சட்ட ஆணையம் மூலம் கொடுக்கப்பட்ட தீா்மானத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே நாடாளுமன்றங்களில் உள்ளதால், அவா்களும் சாதாரண பொதுமக்களின் கருத்துகளையே பிரதிபலிக்கின்றனா். தண்டனை என்பது சீா்திருத்த அடிப்படையில் இருக்க வேண்டும், பழிவாங்கும் வகையில் இருக்க கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com