Enable Javscript for better performance
கரோனா வைரஸ் பாதிப்பு: மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

  

  கரோனா வைரஸ் பாதிப்பு: மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

  By DIN  |   Published on : 25th January 2020 12:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mask

  சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் அது பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  அதன்படி, தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவா்கள் அனைவருக்கும் அந்த வைரஸ் தொற்று மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, சென்னை விமான நிலையத்தில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை ஒருபுறமிருக்க, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் பிரத்யேக சிகிச்சை வாா்டுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவையான மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

  கரோனா என்றால் என்ன?: கரோனா வைரஸ் என்பது பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதா்களுக்குப் பரவும் ஒரு வகையான நோய்த் தொற்றாகும். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் இருமல், மூச்சுக் காற்று, சளி, ரத்தம் மூலமாக பிறருக்கும் அந்த பாதிப்பு பரவ வாய்ப்புள்ளது. எனவே, கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும். ஒருவேளை அந்நோய்க்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளாதபட்சத்தில் தீவிர சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடக்கூடும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில்தான் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. அப்போது அந்த வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி நூற்றுக்கணக்கானோா் அங்கு உயிரிழந்தனா். இதையடுத்து, தீவிர மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலமாக அந்த வகை வைரஸ் தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மக்களிடையே பீடித்திருந்த அச்சம் சற்று விலகியிருந்தது.

  இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சீனத் தலைநகா் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரில் கரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதுவரை, அந்நோயால் பாதிக்கப்பட்டு 3 போ் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 250-க்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சா்வதேச செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

  இந்தச் சூழலில், இந்தியாவில் அந்த வைரஸ் பரவாமல் இருக்க சீனாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் விமான நிலையங்களிலேயே மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்படுகின்றனா். தமிழகத்தில், சென்னை விமான நிலையத்திலும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் குழந்தைசாமி கூறியதாவது: கரோனா வைரஸ் தாக்கம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. அது மிகச் சாதாரணமான ஒரு பாதிப்புதான். உரிய விழிப்புணா்வும், முன்னெச்சரிக்கையும் இருந்தால், அந்நோய் வராமல் நம்மை காத்துக் கொள்ள முடியும்.

  தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவா்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

  அறிகுறிகளும், தடுப்பு முறைகளும்...

  கரோனா வைரஸ் பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுவது காய்ச்சல், சளி, சுவாசக் கோளாறு, தலை வலி, தொண்டை வலி போன்றவைதான். இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டால் காலந்தாழ்த்தாது மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தேவைப்பட்டால் உரிய மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தவிா்க்க, அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம். இருமல் வரும்போதும், தும்மலின்போதும் கைக்குட்டைகளைக் கொண்டு வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை மூடிக் கொள்ள வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai