விரைவில் சாலைகளை கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கும் முறை: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் முதற்கட்டமாக, செங்கல்பட்டு - திருச்சி நெடுஞ்சாலையில் தானியங்கி கேமரா மூலம் கண்காணித்து சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து, 
விரைவில் சாலைகளை கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கும் முறை: எம்.ஆர்.விஜயபாஸ்கர்


சென்னை: தமிழகத்தில் முதற்கட்டமாக, செங்கல்பட்டு - திருச்சி நெடுஞ்சாலையில் தானியங்கி கேமரா மூலம் கண்காணித்து சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து, அபராதம் விதிக்கும் முறை செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

31-வது சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று (21.01.2020) சென்னையில் தொடங்கி வைத்தார்.

இப்பேரணியானது, சேப்பாக்கம் தொடங்கி, வாலாஜா சாலை வழியாக அண்ணா சிலை, தந்தை பெரியார் சிலை, மர்லின் மன்றோ சிலை வழியாக தீவுத் திடல் வரை நடைபெற்றது.

இப்பேரணியில் பங்கேற்ற போக்குவரத்துத்துறை அமைச்சர், சாலை விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்கள். 
போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: போக்குவரத்துத்துறை மற்றும் போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில், 31-வது சாலை பாதுகாப்பு வாரம் 20.01.2020 முதல் 27.01.2020 வரை தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. அதனை நிறைவேற்றிட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக, தமிழகம், இந்தியாவில் சாலை விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் குறைத்ததில் முதல் மாநிலம் என்கின்ற விருதினை மத்திய அரசு நமது மாநிலத்திற்கு வழங்கியுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி 13.01.2020 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்த சாலைப் பாதுகாப்பு விருதினை வழங்கி, சிறப்பித்தார்கள்.

2000 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி, 10,000 வாகனங்களுக்கு 19 நபர்கள் உயிரிழப்பு என்று இருந்த விகிதம், தற்பொழுது 2018 ஆம் ஆண்டு 10,000 வாகனங்களுக்கு 3 நபர்கள் உயிரிழப்பு என்ற அளவில் குறைக்கப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி, 2016 ஆண்டை கணக்கில் கொண்டு, 2020ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் 50 சதவிகிதம் என்ற அளவில் குறைக்க வேண்டும் என்று கருத்தை தெரிவித்துள்ளார்கள்.

அந்த வகையில் தமிழகம் 2018 ஆம் ஆண்டு 43 சதவிகிதம் என்கின்ற அளவிற்கு சாலை விபத்து உயிரிழப்புகளை குறைத்துள்ளது. இதனை மேலும், குறைத்திட வேண்டும் என்கின்ற நோக்கில் பல்வேறு சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்திருக்கிறோம். 

சாலைப் பாதுகாப்பிற்காக ரூ.20 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீட்டினை ரூ.65 கோடியாக உயர்த்தி வழங்கியதன் விளைவாக தமிழகத்தில் விபத்துகள் பெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளன.

இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர், தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். அதே போல், கார்களில் பயணம் செய்பவர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும். இந்த அரசின் சார்பில் தொடர்சியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்தன் வாயிலாகவும், காவல்துறையின் உதவியோடு நகர் புறங்களில் 90 சதவீகிதம் பேர் தலைக்கவசம் அணிகிறார்கள். கிராமப்புறங்களிலும் இது குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு குடும்பத்தில் ஒருவர் உயிரிழக்கும் பொழுது அந்த குடும்பத்தின் நிலைமை மிகவும் மோசமாகிறது. விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் குறைக்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் 31-வது சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளும் மிக சிறப்பாக அந்ததந்த பகுதிகளில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பள்ளிக் கல்வித் துறை வாயிலாக, சாலைப் பாதுகாப்பு மன்றம் அமைக்கப்பட்டு, விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது மாநிலத்தில் கிராமப்புறங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் போன்று சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் வேகமாக சென்று விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக விபத்துக்கள் குறைக்கப்பட்டு, மத்திய அரசு, தமிழக அரசுக்கு விருது வழங்கியதை பெருமையோடு இந்த நேரத்திலே தெரிவித்திட கடமைப்பட்டுள்ளேன்.

தமிழகத்தில் முதற்கட்டமாக, செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான நெடுஞ்சாலையில் தானியங்கி கேமரா மூலம் கண்காணித்து சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து, அபராதம் விதித்து, சாலை விதிமுறைகளை கடைபிடிக்கும் முறையினை தமிழகத்தில் தான் முதன் முறையாக செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் அவர்கள் 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்கள். விபத்து ஏற்படும் சாலைகளில் எல்லாம் இது போன்ற நடைமுறைகள் படிப்படியாக கொண்டுவரப்படும்.

மின்சார பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து? செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு,  525 மின்சரப் பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com