காலமானார்  கலைமாமணி எஸ்.எம்.உமர்

: புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்காலைச் சேர்ந்த கலைமாமணி எஸ்.எம். உமர் (95) திங்கள்கிழமை அதிகாலை காரைக்கால் டூப்ளக்ஸ் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
காலமானார்  கலைமாமணி எஸ்.எம்.உமர்


: புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்காலைச் சேர்ந்த கலைமாமணி எஸ்.எம். உமர் (95) திங்கள்கிழமை அதிகாலை காரைக்கால் டூப்ளக்ஸ் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

காரைக்காலை பூர்வீகமாகக் கொண்ட இப்ராஹிம் மரைக்காயர் மகன் எஸ்.எம். உமர். இவர் தனது 20-ஆவது வயதில் 1945-ஆம் ஆண்டுவாக்கில் நியூட்டோன் ஸ்டூடியோவின் பங்குதாரரான எஃப். நாகூரிடம் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்து, இயக்குநர், தயாரிப்பாளர் என்ற நிலையை எட்டினார்.

பின்னர் வியத்நாம் சென்ற அவர் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏறத்தாழ 600 இந்திய மொழிப் படங்களை வியத்நாம் மொழியில், மொழியாக்கம் (டப்பிங்) செய்து வெளியிட்டார்.  பழம்பெரும் திரைப்பட நடிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். 

டி.ஆர். மகாலிங்கம், எஸ்.வரலட்சுமியை வைத்து "வள்ளித் திருமணம்' என்ற நாடகம்,  எஸ்.டி. சுப்புலட்சுமி, தியாகராஜ பாகவதரை கொண்டு "பவளக்கொடி' நாடகம் என நாடகத்துறையில் தனது பங்களிப்பை வெளிப்படுத்தியதோடு,  பத்திரிகை துறையிலும் ஈடுபட்டு 1939-இல் "இளம்பிறை', "கதம்பம்', "குரல்' மற்றும் "உமர் கய்யாம்' என்ற  பத்திரிகைகளை நடத்தியுள்ளார்.

இவர் "திரையுலகச் சக்ரவர்த்திகள்',  "இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி' உள்ளிட்ட பல புத்தகங்களும் எழுதியுள்ளார். பாரதிதாசன், அண்ணா, எம்ஜிஆர், சிவாஜி, கருணாநிதி உள்ளிட்ட பலருக்கும் நெருக்கமாக இருந்த எஸ்.எம். உமர் பிரபல திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்தவர்.

கி.ஆ.பெ. விசுவநாதம், க.அன்பழகன், ஆர்.பி.எம்.கனி, சுத்தானந்தபாரதி போன்றோரின் எழுத்தோவியங்களைக் கதம்ப நிலையம் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். தினமணி நாளிதழின் நீண்ட கால வாசகர்களில் ஒருவராகவும் இருந்தவர். 

தமிழக அரசு 1998, புதுச்சேரி அரசு 2006 ஆகிய ஆண்டுகளில் இவருக்கு கலைமாமணி விருது வழங்கின.  திரைத் துறையில் 1993-இல் கலைச்செல்வர் விருது, 1995-இல் கலைச்சுடர் விருது என 25-க்கும் மேற்பட்ட விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக வயோதிகத்தால் வீட்டிலேயே  இருந்துவந்த இவர், திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் காலமானார். காரைக்காலை சேர்ந்த பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஹிலுருப் பள்ளி வாசலுக்கு கொண்டு செல்லப்பட்டு  சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்புக்கு : 96000 09650.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com