நிகழாண்டு 25 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்பு: அமைச்சர் ஆர். காமராஜ் பேட்டி

தமிழ்நாட்டில் நிகழாண்டு 25 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது என உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பேசுகிறார் உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ்
கூட்டத்தில் பேசுகிறார் உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ்


தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் நிகழாண்டு 25 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது என உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நெல் கொள்முதல் தொடர்பாக தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள், அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்புக் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

"டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டில் இதுவரை 455 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 67,000 டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 87,000 டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. 

இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் கொள்முதல் செய்யும் பணி முழுவீச்சை அடையும். 

கடந்த ஆண்டு தமிழகத்தில் 1,766 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இவற்றில் 19.10 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டில் விளைச்சல் அதிகம் என்பதால் 25 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அரசும் தயாராக இருக்கிறது.

ஈரப்பதத்தை தளர்த்த நடவடிக்கை:

இப்போது வெயில் நிலவுவதால் நெல்லில் ஈரப்பத பிரச்னை இல்லை. அவ்வாறு பிரச்னை ஏற்பட்டால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல், அவர்களுடைய நெல் கொள்முதல் செய்யப்படும். ஈரப்பத விதியைத் தளர்த்துவது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து பதில் வந்து கொண்டிருக்கிறது. 

எனவே, ஈரப்பத விதி விரைவில் தளர்த்தப்படும்" என்றார் காமராஜ்.

இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் எம். செல்வராஜ், உணவுத் துறை முதன்மைச் செயலர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம். சுதாதேவி, மாவட்ட ஆட்சியர்கள் ம. கோவிந்த ராவ் (தஞ்சாவூர்), டி. ஆனந்த் (திருவாரூர்), பிரவீன் பி. நாயர் (நாகை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com