ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது: வைகோ 

ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "பாஜக அரசு, கடந்த ஆண்டு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றவுடன், உடனடியாக நூறு நாள் செயல் திட்டம் ஒன்றை அறிவித்தது. அதில் முதன்மையாக, ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பு இடம் பெற்றிருந்தது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, கடந்த 2019 ஜூலை 12 ஆம் தேதி ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளிக்கும்போது, "ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும் என்ற கேள்விக்கே இடம் இல்லை; ரயில்வே துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே தனியாரின் பங்கு கோரப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்தார்.

ஆனால், அதற்கு மாறாக, கடந்த ஆண்டு 2019 செப்டம்பர் 23 ஆம் தேதி, மத்திய அரசு சார்பில் இந்திய ரயில்வே வாரியம், 6 மண்டலங்களின் தலைமை மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், 150 வழித்தடங்களைக் குறிப்பிட்டு, அவற்றில் உடனடியாகத் தனியார் ரயில்களை இயக்குவதற்கு எந்தெந்த வழித்தடங்களைத் தேர்வு செய்யலாம் என கருத்துக் கேட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது ரயில்வே துறை சீரமைப்பு தொடர்பாக நிதி ஆயோக் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. ரூ.22 ஆயிரம் கோடி முதலீட்டில் 100 நகரங்களுக்கு இடையே 150 தனியார் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த முடிவெடுத்து இருப்பதாக நிதி ஆயோக் கூறியுள்ளது. இதற்கான திட்ட விவரங்கள், கட்டணம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாக, 'இந்து தமிழ் திசை' நாளேடு ஜனவரி 19-ம் தேதி அன்று விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 150 தனியார் ரயில்களை இயக்குவதற்கு முடிவு செய்து, அதற்கான பணிகளை ரயில்வே துறை மேற்கொண்டு வருகின்றது. சென்னையில் இருந்து ஜோத்பூர் வாரம் ஒருமுறை, மும்பை பன்வல் வாரம் இருமுறை, டெல்லி ஓக்லா, கொல்கொத்தா ஹவுரா, செகந்திராபாத் மற்றும் கோவை, சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, பெங்களூரு என தமிழகத்தில் மட்டும் மொத்தம் 11 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, டெல்லி-லக்னோ வழித்தடத்தில் இயங்கும் தேஜஸ் விரைவு ரயில் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மேலும் 150 பயணிகள் ரயில்கள், 400 ரயில் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. முதலில் 50 ரயில் நிலையங்கள் உடனடியாக ஒப்படைக்கப்பட இருக்கின்றன.

ஏற்கெனவே, அலுவலகங்கள், சேவை அடிப்படையிலான பணிகள், பயணச்சீட்டு விற்பனை ஆகியவை, பகுதி பகுதியாகப் பிரித்துத் தனியார் மயம் ஆக்கப்பட்டுவிட்டன.

தனி பொதுத்துறை நிறுவனம் ஒன்றைப் புதிதாகத் தொடங்கி, அதனிடம் உற்பத்திப் பிரிவுகளை ஒப்படைக்கும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகின்றது. இதற்காக தனியார் முதலீடுகளுடன் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டு இருக்கின்றது.

இவ்வாறு ரயில்வே துறை முழுமையும் தனியார் மயமாக்கப்படும்போது, அரசு மானியம் படிப்படியாக ஒழிக்கப்படும். தற்போது பயணிகள் கட்டணம் ஒரு ரூபாயில் 43 பைசா மானியமாக அரசு தருகின்றது. இந்த மானியத்தை நிறுத்தினால், பயணிகள் கட்டணம் பல மடங்கு உயரும். ரயில் பயணிகள் பெரும் பாதிப்படைவார்கள்.

குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்குச் சேவை அளித்து வரும் ரயில்வே துறையைச் சீர்குலைத்தால், ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சீர்குலையும்.

உலகிலேயே அதிக பணியாளர்கள்,தொழிலாளர்களைக் கொண்ட 9 ஆவது மிகப்பெரிய நிறுவனமான இந்திய ரயில்வே துறையில், 14 லட்சத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தனியார்மயமானால், அந்தத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

எனவே, மத்திய அரசு, ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும்". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com