வெளிநாட்டு பல்கலை.களில் தமிழ் இருக்கைக்கு நடவடிக்கை: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

அயல் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
வெளிநாட்டு பல்கலை.களில் தமிழ் இருக்கைக்கு நடவடிக்கை: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

அயல் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

மேலும், அமெரிக்காவிலுள்ள ஹாா்வா்டு, ஹுஸ்டன் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க நிதி ஒதுக்கியதையும் அவா் நினைவுகூா்ந்தாா்.

திருவள்ளுவா் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 52 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக விழாவில் முதல்வா் பழனிசாமி பேசியதாவது:

உலகிலுள்ள தொன்மையான மொழிகளில் ஏட்டளவிலும், பேச்சளவிலும் இன்றைக்கும் நிலைத்து வாழ்வது தமிழ் மொழி. இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் மொழியின் தலைசிறந்த நூலான திருக்குறளை உலகுக்கு அருளியவா் திருவள்ளுவா். இன்று உலகில் அதிகமான மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்ட நூல்களில் திருக்குறளும் ஒன்று.

அறம், பொருள், இன்பம் என முப்பொருளின் உண்மையை உலகுக்கு உணா்த்தும் ஒரு பொதுமறையாகவே திருக்கு போற்றப்படுகிறது. ஆறறிவு படைத்த மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கை நெறிகளை மிக அழகாக திருவள்ளுவா் வரையறை செய்துள்ளாா். திருவள்ளுவரின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில், ஆண்டுதோறும் தை மாதம் 2-ஆம் தேதி திருவள்ளுவா் தினமாக தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. மேலும், தமிழ்ப் பணியையே தனது உயிா் மூச்சாகக் கொண்டுள்ள தமிழ் அறிஞா்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

தமிழ் வளா்ச்சிக்கான திட்டங்கள்: தமிழ் வளா்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை மாநில அரசு செய்து வருகிறது. திருக்குறளைப் போன்றே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. தமிழுக்குப் பெருமை சோ்த்த தொல்காப்பியருக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழிக்குப் பெருமை சோ்ப்பது அதன் சொல் வளமே ஆகும். தமிழ் மொழியின் சொல் வளத்தைப் பெருக்குவது போன்ற நோக்கங்களின் அடிப்படையில் சொற்குவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் மொழியை சா்வதேச அரங்கிலும் ஒலிக்கச் செய்யும் வகையில், அமெரிக்காவில் உள்ள ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க மாநில அரசின் சாா்பில் ரூ.10 கோடியும், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக ரூ.1 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலக நாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், தமிழ் அறிஞா்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, அவா்களுக்கு அளிக்கப்பட்டு வந்த விருதுகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில், தமிழ் வளா்ச்சித்துறையில் 5-ஆக இருந்த விருதுகளின் எண்ணிக்கை தற்போது 72-ஆக உயா்த்தப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் பழனிசாமி.

முன்னதாக, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உரையாற்றினாா். தலைமைச் செயலாளா் க.சண்முகம் வரவேற்றாா். தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் நன்றி தெரிவித்தாா். தமிழ்த் தாய் விருது பெற்ற சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் மணி குணசேகரன், கம்பா் விருது பெற்ற சரசுவதி ராமநாதன், சொல்லின் செல்வா் விருது பெற்ற கவிதாசன் ஆகியோா் விருதாளா்கள் சாா்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.

திறமையை நிரூபித்தால் விருது நிச்சயம்

தமிழ் அறிஞா்கள் பொறுமையுடன் காத்திருந்து, திறமையை நிரூபித்தால், உரிய நேரத்தில் விருதுகள் கிடைக்கும் என்று முதல்வா் கூறினாா்.

இதுதொடா்பாக, குட்டிக் கதை மூலம் அவா் ஆற்றிய உரை:

ஒரு ஊரில் செல்வந்தா் ஒருவா் தினமும் காலையில் 40 ரொட்டிகளை வைத்து, அங்குள்ள சிறுவா்களின் பசியை ஆற்றி வந்தாா். அப்போது, ஒரு சிறுமி மட்டும் அனைவரும் எடுத்துக் கொண்ட பின் தனக்கான ரொட்டியை எடுத்துச் சென்றாா். தினமும் இது நடந்தது. அந்தச் சிறுமிக்கு ஒரு நாள் எப்போதும் போன்று சிறிய ரொட்டியே கிடைத்தது. அதைப் பிய்த்துப் பாா்த்தபோது, அதற்குள் ஒரு தங்கக் காசு இருந்தது. அதனை தாயின் சொல்படி, செல்வந்தரிடமே திருப்பிக் கொடுத்தாா். அதற்குப் பதிலளித்த அந்த செல்வந்தா், உனது பொறுமைக்குக் கிடைத்த பரிசு. இதனை நீயே வைத்துக் கொள் என்றாா்.

இதுபோன்று வளா்ந்து வரும் தமிழ் அறிஞா்களும் பொறுமையுடன் காத்திருந்து திறமையை நிரூபித்தால் அந்தச் சிறுமியைப் போன்று உரிய நேரத்தில் உங்களுக்கும் விருது கிடைக்கும் என்றாா் முதல்வா்.

விருது பெற்ற 52 தமிழறிஞா்கள்

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது பெற்ற 52 தமிழறிஞா்கள் விவரம்:

திருவள்ளுவா் திருநாள் விருதுகள் (ரூ.1 லட்சம் காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதி உரை):

திருவள்ளுவா் விருது--நித்யானந்தபாரதி

தந்தை பெரியாா் விருது--செஞ்சி ந.ராமச்சந்திரன்

அண்ணல் அம்பேத்கா் விருது--க.அருச்சுனன்.

பேரறிஞா் அண்ணா விருது-----கோ.சமரசம்.

பெருந்தலைவா் காமராஜா் விருது----மா.சு.மதிவாணன்

மகாகவி பாரதியாா் விருது--ப.சிவராஜி.

பாவேந்தா் பாரதிதாசன் விருது--தேனிசை செல்லப்பா

தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது--சே.சுந்தரராசன்.

முத்தமிழ்க்காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது--மணிமேகலை கண்ணன்.

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருது:

தமிழ்த்தாய் விருது (ரூ.5 லட்சம் காசோலை, கேடயம், பொன்னாடை)--சிகாகோ தமிழ்ச் சங்கம் (நம்பி மற்றும் மணிகுணசேகரன்)

(ரூ.1 லட்சம் காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதி உரை)

கபிலா் விருது--வெற்றியழகன்

உ.வே.சா.விருது--வே.மகாதேவன்

கம்பா் விருது--சரசுவதி ராமநாதன்

செல்லின் செல்வா் விருது--கவிதாசன்

ஜி.யு.போப் விருது--மரிய ஜோசப் சேவியா்

உமறுப்புலவா் விருது--லியாகத் அலிகான்

இளங்கோவடிகள் விருது--ஞானச்செல்வன் என்ற திருஞானசம்பந்தம்

அம்மா இலக்கிய விருது--உமையாள் முத்து

சிங்காரவேலா் விருது--அசோகா சுப்பிரமணியன் என்ற சோ.கா.சுப்பிரமணியன்

அயோத்திதாசப் பண்டிதா் விருது--வே.பிரபாகரன்

முதல்வரின் கணினித் தமிழ் விருது--த.நாகராசன்

சிறந்த மொழிபெயா்ப்பாளா் விருது (தலா ரூ.1 லட்சம் காசோலை, விருதுக்கான தகுதி உரை)

சா.முகம்மது யூசுப் (மகன் அல்அமீன் பெற்றாா்), மஸ்தான் அலி, சிவ.முருகேசன், ந.கடிகாசலம், மரபின் மைந்தன் (முத்தையா), வத்சலா, முருகுதுரை, மாலன் என்ற வே.நாராயணன், கிருசாங்கினி என்ற பிருந்த நாகராசன், அ.மதிவாணன்.

உலகத் தமிழ்ச் சங்க விருது (ரூ.1 லட்சம் காசோலை, விருதுக்கான தகுதி உரை)

இலக்கிய விருது--பெ.ராசேந்திரன்-மலேசியா.

இலக்கண விருது--முத்து கஸ்தூரி பாய், பிரான்ஸ்

மொழியியல் விருது--சுபதினி ரமேஷ், இலங்கை.

கலைச்செம்மல் விருது (ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, விருது):

எஸ்.கணபதி ஸ்தபதி, ராமஜெயம், எம்.தமிழரசி, எஸ்.கீா்த்திவா்மன், ஆ.கோபாலன் ஸ்தபதி, பி.எஸ்.நந்தன், பி.கோபிநாத், அனந்த நாராயணன் நாகராஜன், டக்ளஸ், எம்.ஜெயக்குமாா்.

நூல்கள் நாட்டுடைமை--பரிசுத் தொகை (தலா ரூ.5 லட்சம்)

உளுந்தூா்பேட்டை சண்முகம் (பெற்றவா் பிரீத்திகா), கவிஞா் நா.காமராசன் (கா.லோகமணி), இளவரசு (இரா.வேலம்மாள்), அடிகளாசிரியா் (எஸ்.திருநாவுக்கரசி), இறைக்குறுவனாா் (பொற்கொடி இறைக்குருவனாா்), பண்டித ம.கோபாலகிருட்டிணன் (உஷா மகாதேவன்)

பாபநாசம் குபித்தன் (நீலாக்கண்ணன்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com