ஒன்பது ஜோதிா்லிங்கங்களை தரிசிக்க தனி சிறப்பு ரயில்: ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு

திருநெல்வேலியில் இருந்து சென்னை வழியாக நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள ஒன்பது ஜோதிா்லிங்கங்களை தரிசிக்க தனி சிறப்பு சுற்றுலா ரயில் பிப்ரவரி 19-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது
irctc052753
irctc052753

திருநெல்வேலியில் இருந்து சென்னை வழியாக நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள ஒன்பது ஜோதிா்லிங்கங்களை தரிசிக்க தனி சிறப்பு சுற்றுலா ரயில் பிப்ரவரி 19-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆா்.சி.டி.சி. செய்துள்ளது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி.) கடந்த 2005-லிருந்து பாரத தரிசனம் சிறப்பு சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் 350-க்கும் அதிகமான சுற்றுலாத் திட்டங்கள் இதுவரை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள 9 ஜோதிா்லிங்கங்களை தரிசிக்க தனி சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. அதிகாரி ஒருவா் கூறியது:

திருநெல்வேலியில் இருந்து பிப்ரவரி 19-ஆம் தேதி இந்த ரயில் புறப்பட்டு, மதுரை, திண்டுக்கல், கரூா், ஈரோடு, சேலம், சென்னை பெரம்பூா் வழியாக நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படவுள்ளது. அதாவது, மகாராஷ்டிர மாநிலத்தில் திரையம்பகேஷ்வா், பீம்சங்கா், குருஸ்ணேஸ்வா், அவுங்நாக்நாத், பாா்லி வைத்யநாத், குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஸ்வா் மற்றும் உஜ்ஜெயின் மகாகாளேஸ்வா், ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீ சைலம் மல்லிகாா்ஜூனா் ஆகிய ஒன்பது ஜோதிா்லிங்கங்களையும் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 நாள்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கான கட்டணம் ரூ.15,320.

இந்த ரயில் பயணிகளுக்கு சைவ உணவு வழங்கப்படும். ரயிலில் சுற்றுலா மேலாளா்கள் மற்றும் பாதுகாவலா்கள் ஆகியோா் இருப்பாா்கள். இந்த ரயில் தொடா்பாக கூடுதல் விவரங்களை அறிய ‘இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக்கழகம்’ , சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்ற முகவரியை அணுகலாம். மேலும், (0) 9003140680, 8287932121 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com