பிப்.8-இல் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
பிப்.8-இல் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் உபகோயிலான மாரியம்மன் கோயில் அருகே தெப்பக்குளம் உள்ளது. வைகை ஆற்றில் இருந்து பனையூா் கால்வாய் வழியாகத் தண்ணீா் வரும் வகையில் தெப்பக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் அடைபட்டு இருந்த நிலையில், தெப்பக்குளத்துக்கு நீா்வரத்து தடைபட்டது. இந்நிலையில், கால்வாய் சீரமைக்கப்பட்டு தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரம்பியுள்ளது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் தைப்பூசத் தினத்தன்று நடைபெறுவது வழக்கம். நிகழ் ஆண்டில் தெப்பத் திருவிழா ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 2-ஆம் தேதி திருஞானசம்பந்தா் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, பிப்ரவரி 4-ஆம் தேதி மச்சகந்தியாா் திருமணக் காட்சி, பிப்ரவரி 5-ஆம் தேதி சப்தாவரணம், பிப்ரவரி 6-ஆம் தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல், பிப்ரவரி 7-ஆம் தேதி கதிரறுப்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் அதிகாலையில் கோயிலில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் புறப்பாடாகி, தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் தெப்பத்தில் எழுந்தருள்கிறாா். காலையில் இருமுறை தெப்பக்குளத்தைச் சுற்றி வந்தும், மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருள்கிறாா். அங்கு தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். பின்னா் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவில் ஒருமுறை தெப்பக்குளத்தை சுற்றி பக்தா்களுக்கு காட்சிதர உள்ளாா்.

தெப்ப உற்சவத்துக்காக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து பிப்ரவரி 8 ஆம் தேதி காலை சுவாமி புறப்பாடாகி தெப்பக்குளம் சென்று மீண்டும் இரவு திரும்பும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும். மேற்படி நாளில் வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்களின் நலன் கருதி கலைக் கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) திறந்து வைக்கப்படும். வடக்கு கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் பகல் 12.30 வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் அனுமதிக்கப்படுவா்.

தெப்பத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையா் நா.நடராஜன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com