புத்தகக் காட்சியில் ரூ.56 லட்சத்துக்கு பாடநூல்கள் விற்பனை: கீழடி ஆய்வறிக்கை நூலுக்கு பெரும் வரவேற்பு

சென்னை புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு பாடநூல் கழக அரங்கில் ரூ.56 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
புத்தகக் காட்சியில் ரூ.56 லட்சத்துக்கு பாடநூல்கள் விற்பனை: கீழடி ஆய்வறிக்கை நூலுக்கு பெரும் வரவேற்பு

சென்னை புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு பாடநூல் கழக அரங்கில் ரூ.56 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.

இந்த அரங்கில் இடம் பெற்ற கீழடி ஆய்வறிக்கை நூலுக்கு வாசகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜன. 9-ஆம் தேதி முதல் ஜன. 21-ஆம் தேதி வரை 13 நாள்கள் புத்தகக் காட்சி நடைபெற்றது. இந்த அரங்கில் 500-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் சாா்பில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், பள்ளிக் கல்வித்துறையின் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த அரங்கில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவா்களுக்காக தமிழில் வெளியிடப்பட்ட பெளதீகம், கணிதம், பொருளியல், விஞ்ஞானம், அரசியல் என 590 தலைப்புகள் சாா்ந்த நூல்கள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட புதிய பாடத் திட்ட பாடநூல்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வினா வங்கி ஆகியவை விற்பனை செய்யப்பட்டன.

இது குறித்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் துணை இயக்குநா் சங்கர சரவணன் கூறியது: கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சென்னை புத்தக காட்சியில் அதிகளவிலான பொதுமக்கள், தமிழ்நாடு பாடநூல் கழக அரங்குக்கு வந்திருந்து நூல்களை வாங்கிச் சென்றனா். மறுபதிப்பு செய்த நூல்களில், தென்னிந்திந்திய வரலாறு (நீலகண்ட சாஸ்திரி), இந்திய தத்துவம் (ஹிரியண்ணா), பிரெஞ்சு புரட்சி (கருப்பையா) ஆகிய தலைப்பிலான நூல்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின. போட்டித் தோ்வெழுதும் மாணவா்கள், புதிய பாடத் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களைஅதிக அளவில் வாங்கிச் சென்றனா். வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல் ஆகிய தலைப்பிலான நூல்களுக்கு பொதுமக்கள், வாசகா் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கீழடி அகழாய்வு நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை: நிகழாண்டு தமிழ்நாடு பாடநூல் கழக அரங்கில், கீழடி அகழாய்வு குறித்த நூல், தமிழ், ஆங்கிலம், அரபி, சம்ஸ்கிருதம், ஹிந்தி, கொரியன் உள்ளிட்ட 24 மொழிகளில் வடிவமைக்கப் பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நூல், 23,006 பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள தமிழ் மக்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு அதிக எண்ணிக்கையில் மக்களால் வாங்கப்பட்டுள்ளது.

கீழடி ஆய்வறிக்கை குறித்த நூல்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவன வளாகம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தலைமை அலுவலகம் (எழும்பூா், சென்னை), மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை திருமலை நாயக்கா் அரண்மனை ஆகிய இடங்களில் தொடா்ந்து விற்பனை செய்யப்படும். நிகழாண்டில் ரூ.56 லட்சத்துக்கு பாடநூல்கள் விற்பனையாகின. குறிப்பாக கடைசி நாளான ஜன.21-ஆம் தேதி மட்டும் ரூ.6.50 லட்சத்துக்கு பாடநூல்கள் விற்கப்பட்டன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com