நெல்லை புத்தகத் திருவிழா 2020 தேதி அறிவிப்பு

நெல்லை மாவட்ட நிர்வாகம் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் இணைந்து நடத்தும் நெல்லை புத்தகத் திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

திருநெல்வேலி: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 1 முதல் 10ஆம் தேதி வரை 10 நாள்கள் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.   

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆகியன இணைந்து பொதுமக்களின் வாசிப்புத் திறன், அறிவு சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் "நெல்லை புத்தக திருவிழா } 2020' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

110அரங்குகள்: இவ்விழா வருகிற பிப். 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 110 அரங்குகள் இடம்பெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஓவியம் வரைதல்: இவ்விழாவையொட்டி வருகிற 27ஆம் தேதி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 200 மாணவர்கள் திரளாக கூடி ஓவியம் வரைதலும், 28ஆம் தேதி விழிப்புணர்வு சைக்கிள் பேரணியும் நடத்தப்படுகிறது.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வருகிற 30ஆம் தேதி 3 ஆயிரம் மாணவிகள் ஒரே இடத்தில் கூடி புத்தகம் வாசித்தல்,  அதே நாளில் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டு கூட்டத்துக்குப் பின்னர் 15 நிமிடங்கள் புத்தகம் வாசித்தல், வருகிற 31ஆம் தேதி வாசிப்பை ஊக்குவிக்கும் விழிப்புணர்வுப் பேரணி வண்ணார்பேட்டை முதல் வ.உ.சி. மைதானம் வரை நடைபெறவுள்ளது. 

கலைநிகழ்ச்சிகள்: விழா நாள்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள்,  கலை நிகழ்ச்சிகள் போன்றவை காலை 11 மணி முதல் மாலை 4.30 வரையிலும், மாலை 4.30 முதல் 5 மணி வரை நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கவியரங்கம், பட்டிமன்றம்: தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை புத்தக வெளியீட்டு விழாவில், உள்ளூர் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிடும் நிகழ்வு, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு பேச்சாளர்களின் சிறப்புரைகள் மற்றும் கவியரங்கம் நடைபெறுகிறது. தினமும் இரவு 8 மணி  முதல் 10 மணி வரை எழுத்தாளர்கள், கவிஞர்களின் கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கருத்தரங்கம் போன்றவை நடைபெறவுள்ளது. 

மேலும், ஓவியம் வரைதல், புகைப்பட கலை, சமையல் கலை, நாட்டுப்புறக் கலை, சைகை மொழி பயிற்சி உள்பட பல்வேறு கலைசார் பயிற்சிகள் 10 நாள்களும் அளிக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு மற்றும் பயிற்சி தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும். புத்தக திருவிழா மலருக்கான கட்டுரைகளும் கவிதைகளும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு வெளியிடப்படும்.

திருநெல்வேலி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்கள் தினமும் ஒருவர் வீதம் கெüரவிக்கப்படுகின்றனர். பாரம்பரிய உணவு திருவிழா தினமும் நடைபெறுகிறது. கடந்த புத்தக திருவிழாவில் ரூ.2 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன என்றார் அவர்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி சார் ஆட்சியர் மணீஷ் நாராணவரே, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன், துணை ஆட்சியர் (பயிற்சி) அனிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com