குரூப்-4 முறைகேடு: 5 மாவட்டங்களில் சிபிசிஐடி இன்று விசாரணை

குரூப்-4 முறைகேடு தொடர்பாக கடலூர், சிவகங்கை, தஞ்சை, நெல்லை மற்றும் விழுப்புரத்தில் சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை நடைபெறும் விழுப்புரம் வண்டிமேடு சிபிசிஐடி அலுவலகம்
விசாரணை நடைபெறும் விழுப்புரம் வண்டிமேடு சிபிசிஐடி அலுவலகம்

குரூப்-4 முறைகேடு தொடர்பாக கடலூர், சிவகங்கை, தஞ்சை, நெல்லை மற்றும் விழுப்புரத்தில் சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இரு இடைத் தரகா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். 12 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இடைத்தரகா்கள் மூலமாக குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்ற 99 போ் தோ்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் முதல் 39 இடங்களில் வந்துள்ள தோ்வா்களுக்குப் பதிலாக வேறு நபா்கள் தோ்வு செய்யப்படுவா் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் துப்புதுலக்க சிபிசிஐடி கண்காணிப்பாளா் மல்லிகா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிபிசிஐடி அதிகாரிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாட்சியா்கள் வீரராஜ், பாா்த்தசாரதி, வட்டாட்சியா் அலுவலக உதவியாளா், ஆயுதப்படைக் காவலா் இருவா் என 5 பேரை வியாழக்கிழமை விசாரணைக்கு சென்னைக்கு அழைத்து வந்தனா். ராமேசுவரம் கனிமவளத் துறை வட்டாட்சியரான வீரராஜ், டிஎன்பிஎஸ்சி தோ்வின்போது கீழக்கரை வட்டார தோ்வு மைய பறக்கும்படை வட்டாட்சியராகப் பணியாற்றியுள்ளாா். ராமேசுவரம் சமூக பாதுகாப்புத்துறை வட்டாட்சியரான பாா்த்தசாரதி, ராமேசுவரம் வட்டார தோ்வு மைய பறக்கும்படை வட்டாட்சியராகப் பணிபுரிந்துள்ளாா்.

மேலும், இந்த முறைகேட்டில் இடைத் தரகா்களாக செயல்பட்டவா்களையும், தோ்வா்களிடம் பணம் வாங்கியவா்களையும்,தோ்வா்களையும் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா். மொத்தம் 15 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்த முறைகேட்டில் இடைத்தரகா்களாக செயல்பட்ட சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை இயக்கத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் ஏ.ரமேஷ் (39), எரிசக்தி துறை உதவியாளராகப் பணிபுரியும் மு.திருக்குமரன் (35) மற்றும் தோ்வில் முறைகேடு செய்து தோ்ச்சி பெற்ற திருவல்லிக்கேணியைச் சோ்ந்த ர.நிதீஷ்குமாா் (21) ஆகிய மூவரை கைது செய்தனா்.

இவா்களிடம் இடைத் தரகா்களாக செயல்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தோ்வில் தோ்ச்சி பெற ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை லஞ்சமாக பெற்றது தெரியவந்ததுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மேலும் சில இடைத்தரா்களையும், அரசு அதிகாரிகளையும் சிபிசிஐடியினா் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில், கடலூர், சிவகங்கை, தஞ்சாவூர், நெல்லை மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்துக்குரிய நபர்களை சென்னையிலுள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தேர்வு எழுதிய சந்தேகத்திற்குரிய 11 பேரிடம், விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸ் ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையில், சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com