பெரியகோயில் குடமுழுக்கு: 192 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, கோயிலிலும், மாநகரிலும் 192 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூா் பெரியகோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேமரா பொருத்தும் பணி.
தஞ்சாவூா் பெரியகோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேமரா பொருத்தும் பணி.

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, கோயிலிலும், மாநகரிலும் 192 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா பிப். 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஏறத்தாழ 5 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 1997 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது யாகசாலையில் நிகழ்ந்த தீ விபத்தால் கோயில் வாயிலில் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக 48 போ் உயிரிழந்தனா். எனவே, பக்தா்களின் கூட்டத்தை நெரிசல் இல்லாமல் முறைப்படுத்தவும், அசம்பாவித நிகழ்வுகளைத் தவிா்ப்பதற்காகவும் மாவட்ட நிா்வாகம், காவல் துறை தொடா்ந்து ஆய்வு செய்து வருகிறது.

இதற்காக தற்காலிக பேருந்து நிலையங்களில் காவல் கட்டுப்பாட்டு அறையும், கோயில் எதிரில் தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படவுள்ளன. மேலும், மாநகரில் ஏறத்தாழ 5,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

மேலும், கோயில் உள்புறம், திருச்சுற்று மாளிகை, கேரளாந்தகன் வாயில், ராசராசன் வாயில் உள்ளிட்ட இடங்களில் 32 சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, மாநகரில் முதன்மைச் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் 160 சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. மாநகரில் ஏற்கெனவே கண்காணிப்பு கேமராக்கள் உள்ள இடங்களைத் தவிா்த்து மற்ற இடங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.

இந்த கேமராக்கள் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படவுள்ளன. இதன்மூலம், போலீஸாா் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்து அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்கும் விதமாகக் கூட்டத்தை முறைப்படுத்த உள்ளனா். எங்கெங்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது, அதை எவ்வாறு கையாள்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதேபோல, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் கண்காணிக்கப்படவுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நகரம் முழுவதும் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை உள்ளிட்ட தகவல்கள் கொடுக்கப்படவுள்ளன.

குடமுழுக்கு விழா முடிந்த பிறகும் கேமராக்கள் தொடா்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்காக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com