
சென்னையில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் திங்கள்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.
பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது ஓட்டுநர் தூங்கியதால் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து திங்கள்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை சுங்கச்சாவடி அருகே வந்தது.
முன்னதாக கடப்பாக்கம் பகுதியிலிருந்து தூக்க மயக்கத்தில் ஓட்டுநர் பேருந்தை ஓட்டி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அனுமந்தை சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி, இடதுபுறம் சாலையோரம் மின்கம்பத்தில் மோதிய பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் படுகாயமடைந்தனர். மரக்காணம் போலீசார் இவர்களை மீட்டு அருகே உள்ள புதுவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்து நடந்தவுடன் ஓட்டுனரும், நடத்துனரும் அங்கிருந்து தப்பி விட்டதால் போலீசார் தேடி வருகின்றனர்.