
metro train service
சென்னை: சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் வசதிக்காக அறிமுகம் செய்யப்பட்ட இணைப்புச் சேவைகளை பயன்படுத்துவோர் அதிகரித்து வருகின்றனர்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கான பல போக்குவரத்து இணைப்பு சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
7 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ இணைப்பு சேவைகள் ரூ.5 கட்டணத்துடனும், ஷேர் டேக்சி சேவை ரூ.10 கடட்ணத்துடனும் 3 கிலோ மீட்டர் தூரம் வரை இயங்குகின்றன.
டிசம்பர் மாதத்தில் மேற்காணும் மெட்ரோ ரயில் நிலையங்களில் 42,366 பயணிகள் ஷேர் டேக்சி மற்றும் ஷேர் ஆட்டோ வசதிகளையும், 25,597 பயணிகள் மெட்ரோ சீருந்து இணைப்பு சேவையையும் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த சேவை தொடங்கப்பட்டது முதல் டிசம்பர் மாதம் வரை இந்த இணைப்புச் சேவைகளைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 7,18,003 ஆக உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைத்து 32 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் சீருந்து இணைப்புச் சேவையை விரைந்து செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.