உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கான 50% இட ஒதுக்கீடு: நிர்வாகத்தில் தலையிடும் கணவர்கள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியைக் கைப்பற்றிய பெண்களின் நிழலாக இருக்கும் கணவர்கள்,  அந்தப் பதவி தங்களது நேரடி கண் பார்வையிலேயே இருக்க
உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கான 50% இட ஒதுக்கீடு: நிர்வாகத்தில் தலையிடும் கணவர்கள்


நாமக்கல்: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியைக் கைப்பற்றிய பெண்களின் நிழலாக இருக்கும் கணவர்கள், அந்தப் பதவி தங்களது நேரடி கண் பார்வையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதனால் நிர்வாகத்தில் தேவையற்ற பிரச்னைகள் எழுவதுடன், மகளிருக்காக ஒதுக்கிய 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

2016 - ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல், நீதிமன்ற வழக்குகள் உள்பட பல்வேறு பிரச்னைகளால், மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் கடந்த மாதம் நடைபெற்றது. அதுவும், நகர்ப்புறங்களை தவிர்த்து, ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது. பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதுமின்றி மாநிலத் தேர்தல் ஆணையம் அமைதியான முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்பின், இட ஒதுக்கீட்டுக்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனால், நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், போட்டியிட விரும்பிய அரசியல் கட்சியினர் பலர் தங்களது மனைவியரை முன்னிறுத்தி போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றனர்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 உறுப்பினர் பதவிகளுக்கும், 9,624 ஊராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கும், 76,746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், சுமார் 60 சதவீதம் பெண்கள் வெற்றியும் பெற்றனர். இதில் கல்லூரி மாணவி முதல் 80 வயதைக் கடந்த மூத்த பெண்மணிகளும் அடங்குவர். இதையடுத்து, நடைபெற்ற தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில், சுமார் 15 ஆயிரம் பெண்கள் பதவிகளைக் கைப்பற்றினர்.

சமுதாயத்தில் தனித்து நிற்கவும், எதனையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், பெண்களுக்கான அங்கீகாரத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கியிருந்தார். அதனை முழுமையாக அவர்கள் பயன்படுத்துவார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தங்களது பதவியை கணவர்களுக்கு, தாரை வார்த்துக் கொடுப்பதற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.

குறிப்பாக, முக்கிய கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட பெண் தலைவர்களே நேரடியாகப் பங்கேற்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். இதனை தோல்வியடைந்த வேட்பாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக விடுத்து வருகின்றனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதனை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அண்மையில், ஊராட்சித் தலைவர், துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எல்லா மாவட்டங்களிலும் அறிமுக பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், பெண் தலைவர்கள், துணைத் தலைவர்களுடன் வந்த கணவர்கள், மகன்கள், உறவினர்களை கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தடை விதித்தார்.

மேலும், கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், "தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், எந்தவொரு மக்கள் நலப் பணிக்கும் தைரியமாக அதிகாரிகளைச் சந்தித்து முறையிட வேண்டும். கணவர் உதவிக்கு வரலாமே தவிர, தான் தலைவர் என்பது போல் அதிகாரிகளிடத்தில் நெருங்கக் கூடாது. மக்களுக்கான ஒரு பாலமாக நீங்கள் இருக்க வேண்டும். ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றால், கணவரை உங்கள் சார்பில் அனுப்பி வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கிய 50 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்குத்தான். அதனால் கணவர்கள் மனைவியின் பதவியில் தலையிட அனுமதி கிடையாது. இந்தியாவில் இரண்டு தலைவர் பதவிக்குத் தான் பெருமை உண்டு. ஒன்று குடியரசுத் தலைவர் பதவி, மற்றொன்று ஊராட்சித் தலைவர் பதவி. அதனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்.

மூன்றரை ஆண்டுகளாக அதிகாரிகள் பார்வையில் இருந்த ஊராட்சியானது, தற்போது உங்கள் கைகளில் உள்ளது. அதனை வலிமைப்படுத்துவதும், வளமைப்படுத்துவதும் உங்களால் மட்டுமே முடியும்' என்றார்.

இந்த நடைமுறை அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதே தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களின் விருப்பமாகும்.

இருப்பினும், பல நெருக்கடி, கட்டாயங்களால் தலைவர் பதவியில் இருந்தும், அவர்களால் சாதிக்க முடியாமல் போகிறது. இது ஊராட்சிக்கு மட்டுமல்ல, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த நிலை தான் உள்ளது.

ஜெயலலிதா விரும்பிய 50 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாகச் சென்றடையவும், அவரது விருப்பம் நிறைவேறவும், இதற்கு ஒரு நிலையான தீர்வை, தமிழக அரசு காண வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com