விளையாட்டு வளர்ச்சியை கண்டு கொள்ளாத சங்கங்கள்: கேள்விக்குறியாகும் தமிழக வீரர்களின் எதிர்காலம்

விளையாட்டுச் சங்கங்களின் நிர்வாகப் பொறுப்புகளை பிடிப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், விளையாட்டின் வளர்ச்சிக்கு வழங்கப்படுவதில்லை என்றும், பணம் வழங்கினால் மட்டுமே அணியில் இடம்
விளையாட்டு வளர்ச்சியை கண்டு கொள்ளாத சங்கங்கள்: கேள்விக்குறியாகும் தமிழக வீரர்களின் எதிர்காலம்

திண்டுக்கல்: விளையாட்டுச் சங்கங்களின் நிர்வாகப் பொறுப்புகளை பிடிப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், விளையாட்டின் வளர்ச்சிக்கு வழங்கப்படுவதில்லை என்றும், பணம் வழங்கினால் மட்டுமே அணியில் இடம் பெற முடியும் என்ற அவல நிலை இருப்பதாலும் தமிழக விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதில், இந்திய அளவில் தமிழக அரசு முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் ஆண்டுக்கு சுமார் ரூ.190 கோடி விளையாட்டுகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் இந்த நிதி முழுவதும் விளையாட்டுச் சங்கங்களின் வழியாக நடத்தப்படும் போட்டிகளுக்கு மட்டுமே செலவிடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விளையாட்டுச் சங்கங்களின் நிர்வாகப் பொறுப்புகளை கைப்பற்றுவதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அந்த விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு அளிக்கப்படுவதில்லை என பரவலாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக ஒரு விளையாட்டு சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள ஒருவரே பல விளையாட்டுச் சங்கங்களிலும் வெவ்வேறு பதவிகளை வகித்து வருகிறார். இதுபோன்று நிர்வாகிகள் எந்த விளையாட்டின் வளர்ச்சிக்கும் துணை நிற்பதில்லை என்பதும் விளையாட்டு வீரர்களின் குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

விளையாட்டு சங்கங்களின் அமைப்பு: விளையாட்டுக் குழுக்களை ஒருங்கிணைத்து மாவட்ட விளையாட்டுச் சங்கம், மாவட்ட விளையாட்டு சங்கங்கள் இணைந்து மாநில சங்கம், மாநிலங்களிலிருந்து தேசிய விளையாட்டு கூட்டமைப்பு, சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பு என அடுத்தடுத்த நிலைகளில் விளையாட்டு சங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. மாவட்ட விளையாட்டுச் சங்கத்தின் அங்கீகாரத்துடன் செயல்படும் விளையாட்டுக் குழுக்கள் மூலம் மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். மாவட்ட விளையாட்டு சங்க நிர்வாகிகள் மாநில அமைப்பையும், மாநில நிர்வாகிகள் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகிகளையும் தேர்வு செய்கின்றனர். இதில், கையுந்துபந்து சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மட்டும் விளையாட்டுக் குழுக்கள் சார்பில் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

சங்கங்களின் பணிகள்: ஒவ்வொரு விளையாட்டுச் சங்கமும் சுழற்சி (லீக்) முறையிலான போட்டிகள், மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள், பயிற்சி முகாம், மாநில போட்டிக்கு அணிகள் அனுப்புதல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒரு கண்காணிப்பாளரை நியமித்து ஆய்வு செய்து நிதி உதவி வழங்குகிறது.

அதேபோல் தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்லும் அணிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் நிதி உதவி அந்தந்த சங்கங்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான சங்கங்கள் லீக் போட்டிகள் மற்றும் பயிற்சி முகாம் நடத்தாமலே மாநில போட்டிக்கு அணிகளை அனுப்புகின்றன. இதனால் தகுதியான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுவதாக முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த அர்ஜூனா விருது பெற்ற முன்னாள் சர்வதேச குத்துச்சண்டை வீரரான வி.தேவராஜன் கூறியதாவது: சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிப் பெறுவோருக்கு பார்ம் 1, மாநில அளவிலான வெற்றிக்கு பார்ம் 2, அகில இந்திய பல்கலை. அளவிலான போட்டிகளில் பெறும் வெற்றிக்கு பார்ம் 3, இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டிகளுக்கு பார்ம் 4 வழங்கப்படுகிறது. இந்த பார்ம்கள் (சான்றிதழ்கள்) வீரர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகின்றன. அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளுக்கான இந்த சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் விளையாட்டுச் சங்கங்களுக்கே உள்ளது. இதனை பயன்படுத்தி பல சங்கங்களின் நிர்வாகிகள் குறுக்கு வழியில் லாபம் ஈட்டுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாத ஒரு சங்கத்தின் செயலர், பார்ம் 1 சான்றிதழை 150க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு வழங்கி வருகிறார். இதே நிலை பல விளையாட்டுகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளை முறையாக நடத்தாதது மட்டுமின்றி, விளையாட்டுச் சங்கங்களின் நிர்வாகிகள் தேர்வும் விதிமுறைப்படி நடைபெறுவதில்லை. ஒரு விளையாட்டுச் சங்கத்தில் அதுதொடர்பான முன்னாள் வீரர்கள் 30 சதவீதம் பேருக்கு இடம் அளிக்க வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொறுப்பு வகிக்க முடியாது என பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால், அந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வில்லை என்பதோடு, அரசு தரப்பிலும் அதனை நெறிமுறைப்படுத்துவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வில்லை. குறிப்பாக ஒரு சங்கத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர் மற்ற விளையாட்டு சங்கத்தில் பொறுப்பு வகிக்க முடியாது என்ற விதிமுறையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றார்.

ரெப்ரீக்களின் தலையீடு குறித்து கூடைப்பந்து வீரர் ஒருவர் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் போட்டிகளில் கூட விளையாட்டு சங்கங்களின் சார்பில் நியமிக்கப்படும் ரெப்ரீகள்(நடுவர்கள்) முடிவை மட்டுமே பின்பற்ற வேண்டிய கட்டாயச் சூழல் உள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் கூட அதனை எதிர்க்க முடிவதில்லை.

ஹேண்ட் பால், குத்துச் சண்டை, ஸ்கேட்டிங், வாள் சண்டை, தேக்வாண்டோ உள்ளிட்ட போட்டிகளைப் பொருத்தவரை, நடுவர்களின் தலையீடு காரணமாக திறமையான வீரர்கள் ஓரங்கட்டப்படும் நிலை உள்ளது. இந்த நடுவர்கள் விளையாட்டுச் சங்கங்கள் மூலமாகவே நியமிக்கப்படுகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் சம்பந்தப்பட்ட விளையாட்டுச் சங்கம் வசூல் நடத்தியது. இதுபோல் பணம் வசூலிக்கும் இடமாக விளையாட்டுச் சங்கங்கள் மாறி வருகின்றன. விளையாட்டுச் சங்கங்கள் அத்துமீறி செயல்படுவதை தடுத்து ஒழுங்குப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றார்.

வீணடிக்கப்படும் விளையாட்டு நிதி...!

விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டிய சங்க நிர்வாகிகள், பார்ம் 1,2, 3, 4 ஆகிய சான்றிதழ்களை வழங்குவதற்கு கிடைத்துள்ள அதிகாரம், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் தொடங்கி முதல்வர் வரை தங்களுக்கான தொடர்புகளை விரிவுப்படுத்திக் கொள்வதற்காகவும், வேலைவாய்ப்பு தேர்வின் போது தேர்வுக் குழு உறுப்பினர் பதவிகளை பிடிப்பதற்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதனால் விளையாட்டு வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் அரசின் நிதி வீணடிக்கப்படுவது மட்டுமின்றி, அங்கீகாரம் இல்லாத சங்கங்களை நம்பி விளையாட்டு வீரர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com