கசக்கும் இனிப்பு, இனிக்கும் கசப்பு!

"இந்த நீதிமன்றம் விசித்திரமான வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது' என்று பராசக்தி படத்தில் கருணாநிதி ஒரு நீண்ட வசனம் எழுதியிருப்பார்.
கசக்கும் இனிப்பு, இனிக்கும் கசப்பு!

"இந்த நீதிமன்றம் விசித்திரமான வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது' என்று பராசக்தி படத்தில் கருணாநிதி ஒரு நீண்ட வசனம் எழுதியிருப்பார். இப்போது கருணாநிதி கட்டி வளர்த்த திமுகவுக்குள்ளும் விசித்திரமான வழக்கு நடைபெற்று வருகிறது.

பதவி பறிக்கப்பட்டதற்காக டி.ஆர்.பாலு அதிருப்தியில் இருக்க, பதவி உயர்வு கிடைக்கப் பெற்ற நேருவும் அதிருப்தியிலும் வருத்தத்திலும் இருந்து வருகிறார்.
இந்த விசித்திரம் திமுகவைத் தவிர வேறு எங்கும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.
திமுகவைப் பொருத்தவரை மாவட்டச் செயலாளர் பதவி என்பது அமைச்சர் பதவியைப் போன்றது. அதனால், அந்தப் பதவியை இழக்க அவர்கள் தயாராகவே இருக்க மாட்டார்கள்.

மூத்த மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டு, மூன்று மாவட்டங்களாக திமுக பிரித்தபோதுகூட தனது ஆதரவாளர்களையே பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர்களாகக் கொண்டு வந்து, அவர்களையும் மூத்தவர்கள் தமது கைக்குள் வைத்துக் கொண்ட நிலைதான் இருந்தது.

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி (தெற்கு) மாவட்டச் செயலாளராக இருந்த கே.என்.நேருவுக்கு மாநிலப் பொறுப்பாக முதன்மைச் செயலாளர் பொறுப்பை மு.க.ஸ்டாலின் கொடுக்க, எட்டிக்காய் கசப்பாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவர் தவித்து வருகிறார்.

பதவி உயர்வு அதிருப்தி: சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களையும் திமுகவுக்கு கே.என்.நேரு கைப்பற்றிக் கொடுத்தார். இந்த உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கே.என்.நேருவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது போன்ற ஒரு தோற்றம் காட்டப்படுகிறது.

ஆனால், இதற்குப் பின்னால் உள்ள அரசியலை கே.என்.நேரு நன்றாக அறிந்துள்ளார். திருச்சியைப் பொருத்தவரை கே.என்.நேருவுக்கும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இடையே தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் தொடர்ந்து போட்டி இருந்து வருகிறது. இந்த தருணத்தில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை திமுக இளைஞரணிச் செயலாளராகக் கொண்டு வருவதற்கு முனைப்பாக அன்பில் மகேஷ் செயல்பட்டு, அதில் வெற்றியும் பெற்றார். அனைத்து மாவட்டங்களின் சார்பிலும் இளைஞரணிச் செயலாளராக உதயநிதியைக் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் போடவைத்து, கட்சித் தலைமைக்கும் ஒருவகை நெருக்கடியைக் கொடுத்து, அந்தப் பதவிக்கு உதயநிதியை அன்பில் கொண்டு வந்தார்.

அதற்குப் பிரதிபலனாக திருச்சி மாவட்டம் என்றால் அன்பில் மகேஷ்தான் என்ற நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் விரும்புவதாக அறிவாலயம் தரப்பில் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றியைக் காரணம் காட்டி கே.என்.நேருவுக்கு முதன்மைச் செயலாளர் பதவியைக் கொடுத்துவிட்டு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக அன்பில் மகேஷைக் கொண்டு வர உள்ளனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில் இந்தப் பதவி உயர்வை நேருவாலும், அவரது ஆதரவாளர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட தொகுதிகளின் வேட்பாளரை முடிவு செய்யும் அதிகாரம் நேருவிடம் இருந்தது. இப்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டுவிட்டதால், அந்த அதிகாரம் அன்பில் மகேஷுக்குப் போய்விடும். இதனால், தனது ஆதரவாளர்களை இழக்கக்கூடிய நிலை ஏற்படும் என்று நேரு வருந்துவதாகத் தெரிகிறது.

எனினும், வேறு எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் திமுக தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி அறிவாலயத்தில் வந்து கே.என்.நேரு பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார்.

பதவி பறிப்பால் அதிருப்தி: நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் பதவியையும் வகித்து வருவதால், ஒருவருக்கு இரண்டு பதவி கூடாது என்று முதன்மைச் செயலாளர் பதவி டி.ஆர்.பாலுவிடம் இருந்து பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், டி.ஆர்.பாலுவிடம் இருந்து அந்தப் பதவி பறிக்கப்படவில்லை என்று திமுக தலைமை நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அன்பில் மகேஷுக்காக கே.என்.நேருவை முதன்மைச் செயலாளராக மாற்றும் முடிவை எடுத்தபோது, டி.ஆர்.பாலுவும் அந்தப் பதவியில் நீடிக்க வேண்டும் என்றே மு.க.ஸ்டாலின் விரும்பியுள்ளார். அதை டி.ஆர்.பாலுவிடம் மு.க.ஸ்டாலினும் கூறியுள்ளார். ஆனால், இருவருக்கும் ஒரே பதவியா என்று டி.ஆர்.பாலு தனது ஆதங்கத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

''அப்படியானால், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக மட்டும் நீங்கள் நீடியுங்கள்'' என்று ஸ்டாலின் கூறி, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டார். மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று எதிர்பாராத டி.ஆர்.பாலு, அந்தத் திகைப்பில் இருந்து இன்னும் வெளிவர முடியாதவராகவே இருந்து வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்த அறிவாலய வட்டாரத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com