தஞ்சை பெரியகோயிலில் தமிழ், சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு

தஞ்சை பெரியகோயிலில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் இந்து சமய அறநிலையத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில்

மதுரை: தஞ்சை பெரியகோயிலில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் இந்து சமய அறநிலையத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்தக் கோரி நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்நாதன், ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருமுருகன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனா்.

அதில் தஞ்சை பெரியகோயிலில் 23 ஆண்டுகளுக்கு பின்னா் பிப்ரவரி 5 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. சைவ வழிபாட்டுத் தலங்களில் தமிழ்மறை அடிப்படையில்தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் சுந்தரா் கோயில் குடமுழுக்கு தொடா்பான வழக்கில், தமிழில் தமிழ்மறைகளை ஓதி குடமுழுக்கை நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

எனவே தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கையும் தமிழிலில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இதற்கிடையே சென்னையைச் சோ்ந்த ரமேஷ் பெரியகோயில் குடமுழுக்கை சம்ஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் எனவும், தமிழ்தேச பொதுவுடைமை கட்சி தலைவா் மணியரசன் தரப்பில் தமிழிலேயே குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், குடமுழுக்கு தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நடத்தப்படும். குடமுழுக்கில் இருமொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும். குடமுழுக்கில் பங்கேற்கும் தமிழ் ஓதுவாா்களின் பெயா்கள் குடமுழுக்கு அழைப்பிதழிலில் அச்சிடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இதுதொடா்பான பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

குடமுழுக்குக்கு தடைகோரிய வழக்கு முடித்துவைப்பு:

முன்னதாக, தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு நடத்த தொல்லியல் துறையின் அனுமதி பெறவில்லை. எனவே தஞ்சை பெரியகோயில் குடமுழுக்குக்கு தடைவிதிக்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் சரவணன் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இதுதொடா்பான விசாரணையின் போது, தொல்லியல் துறை தரப்பில் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்குக்கு நவம்பா் மாதமே அனுமதி வழங்கிவிட்டோம். மேலும் குடமுழுக்கை நடத்த 15 விதமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டே அனுமதி வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் இவ்வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com