நடுநிலை என்பது போலித்தனம்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

நடுநிலை என்பது போலித்தனம். ஆணித்தரமாக கருத்தைப் பதிவு செய்வதுதான் பத்திரிகை தர்மம் என்று தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தெரிவித்தார்.
நடுநிலை என்பது போலித்தனம்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

நடுநிலை என்பது போலித்தனம். ஆணித்தரமாக கருத்தைப் பதிவு செய்வதுதான் பத்திரிகை தர்மம் என்று தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தெரிவித்தார்.
 திருச்சி தேசியக் கல்லூரியில் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைச் சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரிச் செயலர் கா. ரகுநாதன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசியது:
 ஏறத்தாழ 130 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே நாட்டுப் பற்றுடன் தொடங்கப்பட்ட கல்விச்சாலை இது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில் தேசிய கல்விச்சாலை என்கிற பெயரில் இதைத் தொடங்க வேண்டுமானால் எந்த அளவுக்கு அவர்களுக்கு துணிவு இருந்திருக்க வேண்டும். சேஷாச்சாரியார், சுந்தரேச சாஸ்திரிகள், வெங்கட ரமண சர்மா என்று மூன்று தேசபக்தர்களால் 1886-இல் தொடங்கப்பட்ட தேசிய பாடசாலை, 1919-இல் கல்லூரியாக மாறியது. அதற்குப் பிறகு 40 ஆண்டுகள் கழிந்துதான் இப்போதிருக்கும் இந்த இடத்தில் திவான் பகதூர் பெத்தாட்சி செட்டியாரின் கொடையால் கல்லூரி செயல்படத் தொடங்கியது.
 தேசிய உணர்வுடன் தொடங்கப்பட்ட தேசியக் கல்லூரியில் தேச விடுதலைக்காகப் போராடிய அமரர் கல்கி நினைவுச் சொற்பொழிவுக்கு தேசிய நாளிதழான "தினமணி'யின் சார்பில் அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவை நிகழ்த்துவது என்பதே பெருமிதத்துக்குரியது.
 இந்த நிறுவனத்தில் மாணவராக இருந்த ரா. கிருஷ்ணமூர்த்தி, தமிழகம் போற்றும் தலைசிறந்த எழுத்தாளர் கல்கியாக உருவாகி, இன்றும் நினைவில் நிலைத்திருப்பது இந்தக் கல்லூரியின் தனிப்பெருமை. அமரர் கல்கியின் பெயரில் அவரை உருவாக்கிய தேசியக் கல்லூரி அறக்கட்டளை உருவாக்கி ஆண்டுதோறும் நினைவு சொற்பொழிவை நிகழ்த்துவதை எத்துணை பாராட்டினாலும் தகும். ஆசிரியர் கல்கியின் அருமை பெருமைகளை வார்த்தையில் வடிப்பது அசாத்தியம். தான் வாழ்ந்த 55 ஆண்டுகளில் அவர் செய்திருக்கும் சாதனைகள் மகத்தானது.
 தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் நவசக்தி இதழில் உதவி ஆசிரியராக தனது எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கியவர் ஆசிரியர் கல்கி. அவரிடம் ஆனந்த விகடனிலும், பிறகு கல்கி வார இதழிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர் எங்கள் ஆசிரியர் சாவி. அந்த வகையில் திரு.வி.க., கல்கி, சாவி வம்சாவளியைச் சேர்ந்தவன் நான் என்கிற பெருமிதம் எனக்கு எப்போதுமே உண்டு.
 கல்கியைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட இன்னொரு எழுத்தாளர் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்ததில்லை. புதினம், கவிதை, கட்டுரைகள் என்று எழுத்தின் எல்லா பரிமாணங்களையும் வெற்றிகரமாக நிகழ்த்தியவர் கல்கி. "கர்நாடகம்' என்கிற பெயரில் அவர் எழுதிய இசை, நாட்டிய, திரைப்பட விமர்சனங்கள் இன்று முன்னோடி விமர்சன இலக்கியம். ஒருபுறம் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு என்று வரலாற்றுப் புதினங்களையும், இன்னொருபுறம் மகுடபதி, தியாக பூமி, அலையோசை என்று சமூக நாவல்களையும் எழுதி வெற்றி கண்டவர் ஆசிரியர் கல்கி.
 ஆசிரியர் கல்கியின் தலைசிறந்த சாதனைகளாக நான் கருதுவது மூன்று பங்களிப்புகளை. ஆசிரியர் கல்கியின் ஆதரவும், உறுதுணையும் இல்லாமல் போயிருந்தால் மூதறிஞர் ராஜாஜியும், ராஜா சர் அண்ணாமலை செட்டியாரும், ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியாரும், ஆர்.கே. சண்முகம் செட்டியும் தொடங்கிய தமிழிசை இயக்கம், இந்த அளவிலான வெற்றியைப் பெற்றிருக்குமா என்பது சந்தேகம். கல்கியின் முதலாவது பங்களிப்பு தமிழிசை இயக்கம்.
 அவரது இரண்டாவது பங்களிப்பு, கல்கி இதழின் மூலம் வாசகர்களிடமிருந்து திரட்டிய நன்கொடையில் "எழுத்துச் சித்தர்' மகாகவி பாரதிக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம் எழுப்பியது. மூன்றாவது பங்களிப்பு, அண்ணல் காந்தியடிகளின் தன் வரலாறை சத்திய சோதனை என்கிற பெயரில் தமிழாக்கம் செய்தது.


 இன்று இதழியல் துறை பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. எழுத்தாளர்களுக்கு நடுநிலை தேவை என்கிற கருத்து பரவலாகக் கூறப்படுகிறது. தனக்கென்று எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்வதுதான் நடுநிலைமை என்கிற கருத்து நிலவுகிறது. இது ஏற்புடையதல்ல. எழுத்தாளன் என்பவன் சமுதாய நோக்கில் தனது கருத்தை சுதந்திரமாகப் பதிவு செய்வதுதான் சரியாக இருக்குமே தவிர, எதையும் சாராமல் தனக்கென்று கருத்தும் இல்லாமல் இருக்கும் நடுநிலைமை, போலித்தனமல்லாமல் வேறென்ன? எந்தவொரு இயக்கத்துடனும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தவறென்று தோன்றுவதை தவறு என்றும், சரியென்று தோன்றுவதை சரிஎன்றும் துணிந்து பதிவு செய்வதுதான் எழுத்தாளனின் கடமை.
 எழுத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும். விவாத கலாசாரம் இருந்தாக வேண்டும். மாற்றுக் கருத்துக்கு இடமளித்து சமுதாய நன்மை கருதி, தான் கொண்ட கருத்தைப் பதிவு செய்யும் எழுத்து சுதந்திரம்தான் அமரர் கல்கியும், எங்கள் முன்னோடி ஆசிரியர்களான டி.எஸ். சொக்கலிங்கமும், ஏ.என். சிவராமனும் நிலைநிறுத்திய பத்திரிகை தர்மம். அமரர் கல்கி அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவின் மூலம் நான் பதிவு செய்ய விரும்புவது அதைத்தான் என்றார் "தினமணி' ஆசிரியர்.
 முன்னதாக கல்லூரி முதல்வர் இரா. சுந்தரராமன் வரவேற்றார். முனைவர் வி. நீலகண்டன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். தமிழாய்வுத்துறைத் தலைவர் ச.ஈஸ்வரன் நன்றி கூறினார். இதில், பேராசிரிய, பேராசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com