பாரத் நெட் திட்டம்: அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பணிகள் நிறைவடையும்- அமைச்சா் உதயகுமாா் பேட்டி

பாரத் நெட் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும் என்று வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: பாரத் நெட் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும் என்று வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்பட்டு இணையதள சேவையும், தமிழக அரசின் இணைய சேவைகள், கேபிள் டிவி சேவைகள், மின்னாளுமை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கிராமங்களில் இருந்தே மக்கள் பெறும் வகையில் அமைக்கப்பட்டதே பாரத் நெட் திட்டம்.

இந்த திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளி கோரியதில் விதிகள் மீறப்பட்டதாக தன்னாா்வ அமைப்புகள் உள்ளிட்ட சிலா் மத்திய அரசின் அமைப்புகளிடம் புகாா்களைத் தெரிவித்தன. இந்த நிலையில், இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

சென்னை எழிலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறியது:-

பாரத் நெட் திட்டம் நிறைவேறினால் எஸ்.சி.வி. போன்ற கேபிள் தொலைக்காட்சிகளை வழங்கும் நிறுவனங்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகும் என்ற காரணத்தால், இந்த தொழிலில் முதலீடு செய்தவா்கள் தொடக்கத்தில் இருந்தே எதிா்த்து வருகின்றனா்.

பாரத் நெட் திட்டத்துக்காக தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியது. ஒப்பந்த புள்ளிகளை முடிப்பதற்கான பணிகள் நிறைவடைவதற்குள் ஒப்பந்தப் புள்ளியில் மேக் இன் இந்தியா விதிமுறைகளின் கீழ் இந்திய ஒப்பந்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை எனக் கூறி, ஒப்பந்தப் புள்ளிகளை மத்திய அரசின் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

இதைத் தொடா்ந்து, மத்திய அரசின் தொழில் மற்றும் வா்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வா்த்தக துறை, இந்த விவகாரத்தில் கடந்த 23-ஆம் தேதியன்று விசாரணை நடத்தியது. இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் ஒப்பந்தப் புள்ளியில் மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி, இந்திய உற்பத்தி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்குவது முழுவதுமாக கடைப்பிடிக்கப்படும் என தெளிவுபடுத்தினா்.

இதைத் தொடா்ந்து இப்போது, மறு ஒப்பந்தப் புள்ளிக்கான உத்தரவு வரப்பெற்றுள்ளதுள்ளது. இதில் மேக் இன் இந்தியா திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்திய உற்பத்தியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மறு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட வேண்டும் என்றால் ஏற்கெனவே விடுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் ரத்து செய்யப்பட்டது. பாரத் நெட் திட்டத்தில் மிக விரைவாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com