வெறிச்சோடி காணப்பட்ட ஈரோடு பேருந்து நிலையம்
வெறிச்சோடி காணப்பட்ட ஈரோடு பேருந்து நிலையம்

இன்று முதல் பேருந்துகள் இயக்க தடை: ஈரோடு பேருந்து நிலையம் வெறிச்சோடியது

ஈரோட்டில் இன்று முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயக்க தடை நீடிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. 

ஈரோட்டில் இன்று முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயக்க தடை நீடிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. 

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் இந்தியாவில் ஊடுருவி இன்று தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. முதல் முதலில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் பொது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு இந்த மாவட்டங்களைத் தவிரப் பிற மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியதால் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் அரசு வழிகாட்டி நெறிமுறைகள் உடன் முதற்கட்டமாக 50 சதவீத அரசு பேருந்து இயங்க தொடங்கியது. ஈரோடு, கோயமுத்தூர், கரூர், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் ஒரு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இந்த மண்டலத்திற்குள் பேருந்து போக்குவரத்து நடைபெற்றது. 

பிற மண்டலத்திற்குள் செல்ல இ-பாஸ் முறை அமலில் இருந்தது. ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 13 கிளைகளில் 800  பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வந்தன. இதில் முதற்கட்டமாக 280 உள்ளூர் மற்றும் வெளிவட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதேபோல் கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன ஈரோடு மாவட்டத்தில் 270 தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்தன. 

இதில் முதற்கட்டமாக 135 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதைப்போல் 160 மினி பஸ்களில் முதற்கட்டமாக  30க்கும் குறைவான மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பிற மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.  இதற்கு பொது போக்குவரத்தும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டத்திற்கு மாவட்டம் செல்ல போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.  

மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து நடந்து வந்தது. பிற மாவட்டத்திற்குச் செல்ல இ- பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல்  ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மேலும் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை பேருந்து போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் ஈரோடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அந்தப் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com