தீவிரமாகும் கரோனா: சிவகங்கை மாவட்டத்தில் ஜமாபந்தியை நிறுத்திவைக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் 29-ந் தேதி
தீவிரமாகும் கரோனா: சிவகங்கை மாவட்டத்தில் ஜமாபந்தியை நிறுத்திவைக்கக் கோரிக்கை


மானாமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் 29-ந் தேதி தொடங்கப்பட்டுள்ள வருவாய்துறையின் ஜமாபந்தி நிகழ்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஜூன் 29 ந் தேதி  முதல் ஜமாபந்தி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வட்டத்திலும் குறைந்தது 40 வருவாய்த்துறை ஊழியர்கள், 50 கிராம நிர்வாக அலுவலர்கள், 50 கிராம உதவியாளர்கள் என சுமார் 150 பேர் இந்த பணிகளுக்காக அந்தந்த பகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டமாக கூட வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் சுமார் 30க்கும்  மேற்பட்ட வருவாய்க்கணக்கு நோட்டுகளை அனைத்து ஊழியர்களும் தொட்டு கையொப்பமிட வேண்டியுள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் கரானா தொற்று வேகமாக பரவி வருகிறது. இச்சூழ்நிலையில் ஜமாபந்தியில் ஈடுபட்டுள்ள ஏதாவது ஒரு நபருக்கு கரோனா தொற்று இருந்தாலும், அது பலருக்கும் பரவிவிடும் அபாயம் உள்ளது. 

இதன் காரணமாகத்தான் மதுரை மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜமாபந்தி ரத்து செய்யப்பட்டுள்ளது.  இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும், துணை வட்டாட்சியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த சில நாட்களாக  அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியை தொடங்குதற்கான பணியில் இருந்து வந்துள்ளார். இதனால் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும்  அச்சத்தில் உள்ளனர்.

எனவே  மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி நடந்து வரும் ஜமாபந்தி பணிகளை, கரோனா தொற்று பரவல் சரியாகும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்து உத்தரவிட வேண்டுமென வருவாய்துறையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களும் உடனடியாக கரோனா பரிசோதனை நடத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com