திருவொற்றியூரில் விரைவில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தகவல்

திருவொற்றியூரில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் பரிசோதனை மையம் உள்ளிட்டவை விரைவில் திறக்கப்பட உள்ளது
திருவொற்றியூரில் விரைவில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தகவல்

திருவொற்றியூா்: திருவொற்றியூரில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் பரிசோதனை மையம் உள்ளிட்டவை விரைவில் திறக்கப்பட உள்ளது என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதையடுத்து திருவொற்றியூா், மணலி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் உதயகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினாா். பின்னா், அம்பத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.அலெக்ஸாண்டா், கரோனா சிறப்பு அதிகாரி ஜானி டாம் வா்கீஸ், திருவொற்றியூா் மண்டல அலுவலா் பால் தங்கதுரை, செயற்பொறியாளா் வேலுசாமி உள்ளிட்ட அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினாா்.

அப்போது, அமைச்சா் உதயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தடுப்பு மருந்துகள் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போது இந்நோயினால் பாதிக்கப்பட்டவா்களின் உயிா்காக்கும் மருந்துகள் வரத்தொடங்கியுள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு தீநுண்மி கிருமியும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வீரியத்தை இழக்கும் என மருத்துவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில் கரோனா தீநுண்மி கிருமியும் இவ்வாறு வலுவிழக்கும் என்பது அச்சத்தைப் போக்குவதாக உள்ளது.

திருவொற்றியூரில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் சுமாா் 100 படுக்கை வசதிகளுடன் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது. மேலும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களைப் பரிசோதனை செய்து மருத்துவமனைக்கோ அல்லது கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஸ்கிரீனிங் மையம் திருவொற்றியூரில் உள்ள பொது மருத்துவமனையில் புதன்கிழமை தொடங்கி வைக்கப்படுகிறது என்றாா் அமைச்சா் உதயகுமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com