கரோனா சிகிச்சை மையங்களாகும் தும்பல், மகுடஞ்சாவடி ஆரம்பச் சுகாதார நிலையங்கள்

சேலம் மாவட்டத்தில், தும்பல் மற்றும் மகுடஞ்சாவடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்கள், கரோனா சிகிச்சை மையங்களாக மாறுகின்றன. 
கரோனா சிகிச்சை மையங்களாகும் தும்பல், மகுடஞ்சாவடி ஆரம்பச் சுகாதார நிலையங்கள்

சேலம் மாவட்டத்தில், தும்பல் மற்றும் மகுடஞ்சாவடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்கள், கரோனா சிகிச்சை மையங்களாக மாறுகின்றன. 

தமிழகத்தில் கரோனா தொற்று  பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், வட்ட  மருத்துவமனைகளிலும், கரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு, போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்து, கரோனா தொற்று பாதித்தவர்களைத் தனிமைப்படுத்தி, உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைத் தொடர்ந்து, தற்போது, மதுரை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பெரும்பாலான உள் மாவட்டங்களிலும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் கூடிய, அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும், கரோனா நோய்த்தொற்று சிகிச்சை மையங்கள் அமைக்க, தமிழக அரசு சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 123 அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களை, கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி அமைப்பது குறித்து பொதுப்பணித்துறையுடன் இணைந்து, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் தும்பல்  அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையம், மற்றும்  மகுடஞ்சாவடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தையும், கரோனா சிகிச்சை மையங்களாக  மாற்றியமைத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மையங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் குழாய்கள் பதித்தல், போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தல் ஆகிய பணிகளை பொதுப்பணித்துறை விரைந்து மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ரத்த அழுத்தம், நீரழிவு, இருதய நோய், சிறுநீரக கோளாறு, வயது மூப்பு ஆகிய பிரச்னைகள் உள்ளநிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை, அனைத்து மருத்துவ வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கவும், லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை, புதிதாக அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் அமைக்கப்படும் சிகிச்சை மையங்களில் அனுமதித்துத் தனிமைப்படுத்தி, உரிய கூட்டு மருந்து சிகிச்சை அளித்து, குணப்படுத்த அனுப்பி வைக்கவும் தமிழக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. 

இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அருகாமையிலுள்ள அரசு சுகாதார நிலையங்களிலேயே, உரியச் சிகிச்சை பெறுவதற்கு வழிவகை கிடைத்துள்ளது. எனவே, மாவட்டங்கள் தோறும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் திட்டத்திற்கு, அனைத்துத் தரப்பினரிடையேயும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com