தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடைபெறும்: இந்து முன்னணி அறிவிப்பு

தமிழகத்தில் கரோனா அச்சம் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவானது அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி மிக எளிமையாக நடைபெறும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பு
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பு

திருப்பூர்: தமிழகத்தில் கரோனா அச்சம் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவானது அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி மிக எளிமையாக நடைபெறும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது:

இந்து முன்னணி தொடங்கி 40 ஆண்டுகளை நிறைவடைகின்றன. இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதிலும் கடந்த 32 ஆண்டுகளாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னையில் ஒரு சிலையுடன் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனால் தொடங்கப்பட்டு தற்போது தமிழகம் முழுவதிலும் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு வருகிறது.

கரோனா நோய்த் தொற்று மக்களை அச்சுறுத்தி வருவதால் கடந்த ஆண்டு வைக்கப்பட்டுள்ள அதே பகுதிகளில் மிக எளிமையாக அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ளது. அதே வேளையில், எந்தவிதமான ஆடம்பரம், ஊர்வலம், நன்கொடை வசூல் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

மேலும், அந்தந்த கிளை கமிட்டிகளின் சொந்த செலவுகளில் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். இதன் பிறகு மாலை 6 மணி அளவில் அனைத்து வீடுகளிலும் மஞ்சள் பிள்ளையாருக்கு தீபாரதனை காண்பித்து வழிபாடு நடத்தி, அதை விசர்ஜனம் செய்து வீட்டு வாசல்களில் தெளிக்க வேண்டும். தமிழகம் முழுவதிலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக 1.5 லட்சம் சிலைகள் வைக்கப்படும் என்றார்.

இந்த சந்திப்பின்போது மாநிலச் செயலாளர்கள் ஜெ.எஸ்.கிஷோர்குமார்,வி.எஸ். செந்தில்குமார், தாமு ஜி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com