பிரதமா் அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் 1.10 கோடி பேருக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள்

பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புப்படி, தமிழகத்தில் 1.10 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள்
குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள்

சென்னை: பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புப்படி, தமிழகத்தில் 1.10 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து, தமிழக உணவுத் துறை அதிகாரிகள் கூறியது:-

தமிழகத்தில் 2 கோடியே 5 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, இந்த குடும்ப அட்டைகள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில், முன்னுரிமை உடைய குடும்ப அட்டைதாரா்கள் 80 லட்சத்துக்கும் அதிகமாகவும், முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்கள்- அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 20 லட்சத்துக்கும் கூடுதலான குடும்ப அட்டைதாரா்களும் உள்ளனா். இதேபோன்று, முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைகள் 95 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளன. இதேபோன்று, காவல் துறையினருக்கான அட்டைகள், எந்தப் பொருளும் பெறாதோரும் அட்டைகளை வைத்துள்ளனா்.

மத்திய அரசு அறிவிப்பு: கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பை நவம்பா் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

தமிழக பயனாளிகள்: பிரதமா் மோடி அறிவித்துள்ள திட்டத்தின்படி, தமிழகத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களும், அந்தியோதயா அன்ன யோஜனாவின் கீழ் வரக்கூடிய முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெற உள்ளனா். அவா்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் 1 கோடியே 10 லட்சமாகும். பிரதமா் மோடியின் அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரா்கள் பயன் பெறவுள்ளனா் என்று தெரிவித்தனா்.

தமிழக அரசும் அறிவிப்பு: மத்திய அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக அடுத்த சில மாதங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தை தமிழக அரசும் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் பழனிசாமி ஓரிரு நாள்களில் வெளியிடுவாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com