நீதித்துறை நடுவரின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை விசாரித்துவரும் நீதித்துறை நடுவர் எம்.எஸ். பாரதிதாசன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ள அறிக்
ஜெயராஜ்-பென்னிக்ஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ்


மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை விசாரித்துவரும் நீதித்துறை நடுவர் எம்.எஸ். பாரதிதாசன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ள அறிக்கையில் அதிர்ச்சியான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அவருடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு ஜூன் 28 ஆம் தேதி சென்றிருந்தேன். அங்கு காவல் ஆய்வாளர் அறையில் தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் எனக்கு வணக்கம் கூடத் தெரிவிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டனர். இதையடுத்து தந்தை, மகன் உயிரிழப்பு வழக்குத் தொடர்பான பதிவேடுகள், கோப்புகளை எடுத்துவரக் கூறியபோது, காவல்நிலைய எழுத்தர் தாமதமாக பதிவேடுகளை எடுத்துவந்தார். 

பிறகு காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டன. ஆனால் அதில் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பான அனைத்துப் பதிவுகளும் அழிக்கப்பட்டிருந்தன. அப்போது கணினி சர்வரில் போதுமான இடவசதி இருந்தும், கண்காணிப்பு பதிவுகள் தானாகவே தினமும் அழிந்து போகும் வகையில் "செட்டிங்ஸ்' மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதனிடையே காவல்நிலையத்தின் வெளியே கூடியிருந்த காவலர்கள் விசாரணையைக் கிண்டல் செய்யும் வகையில் பேசிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து, சாத்தான்குளம் காவல்நிலைய தலைமைக் காவலர் ரேவதியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது அவர் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டார்.  ரேவதி தனது வாக்குமூலத்தில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரைப் போலீஸார் விடிய விடிய அடித்தனர். அதில் போலீஸார் பயன்படுத்திய லத்திகள் மற்றும் காவல்நிலையத்தில் இருந்த மேஜையில் ரத்தக் கறை படிந்துள்ளது. அதனை சம்பந்தப்பட்ட போலீஸார் அழிக்க நேரிடும் என்றும், அந்தத் தடயங்களை உடனடியாகக் கைப்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். 

அப்போது தலைமைக் காவலரான மகாராஜன் தவறான வார்த்தைகளைப் பேசி அங்கு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார். இதையடுத்து தலைமைக் காவலர் ரேவதி வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். பின்னர் மிகவும் சிரமப்பட்டு அவரிடம் கையெழுத்து பெற்றேன். 

தொடர் விசாரணையின்போது, தலைமைக் காவலர் மகாராஜனின் லத்தியைக் கேட்ட போது, லத்தி சொந்த ஊரில் உள்ளது என்றும், காவலர் குடியிருப்பில் உள்ளது என்றும் அங்கும் இங்கும் நடந்து கொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார். மேலும் அவர் விசாரணை அதிகாரியான என்னிடம் ஒருமையில் பேசி அவமதித்தார். மற்றொரு காவலருடைய லத்தியைக் கேட்டபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் தூத்துக்குடி காவல்துறையினர் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com