தமிழக வீட்டுவசதி, வாழ்விட மேம்பாட்டுக்கு உலக வங்கி ரூ.1,892 கோடி கடன்: மத்திய அரசு ஒப்பந்தம்

தமிழகத்தில் வீட்டு வசதியை வலுப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.1514 கோடியையும், வாழ்விட மேம்பாட்டுத்திட்டத்துக்கு ரூ 378.6 கோடியையும் உலகவங்கி கடனாகக் கொடுக்கிறது.
தமிழக வீட்டுவசதி, வாழ்விட மேம்பாட்டுக்கு உலக வங்கி ரூ.1,892 கோடி கடன்: மத்திய அரசு ஒப்பந்தம்

புது தில்லி: தமிழகத்தில் வீட்டு வசதியை வலுப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.1514 கோடியையும், வாழ்விட மேம்பாட்டுத்திட்டத்துக்கு ரூ 378.6 கோடியையும் உலகவங்கி கடனாகக் கொடுக்கிறது. இந்த இரு ஒப்பந்தங்களும் தில்லியில் திங்கள்கிழமை கையெழுத்தானது.

குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு ஏதுவான விலையில் வீடுகளை பெறுவதற்கு உதவும் வகையில் தமிழக அரசின் சாா்பில் மத்திய அரசும் உலக வங்கியும் கையெழுத்திட்டன. வாழ்விட மேம்பாட்டுத்திட்டதுக்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் பிரதிநிதியும் உலகவங்கியும் என இந்த இரு சட்டபூா்வமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது.

‘முதலாவது தமிழக வீட்டுவசதி வலுப்படுத்தல்’ என்கிற இந்த திட்டத்திற்கு ரூ. 1,514.4 கோடி (200 மில்லியன் டாலா்) கொடுக்கப்படுகிறது. இந்த கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதித்துறையின் பொருளாதார விவகாரத் துறை கூடுதல் செயலா் சமீா் குமாா் கரே இந்திய அரசின் சாா்பிலும் உலக வங்கியின் சாா்பில் அதன் இந்திய இயக்குநா் ஜுனைத் கமால் அகமத்தும் கையெழுத்திட்டனா்.

தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத்திட்டத்திற்கு ரூ.378.6 கோடிக்கான(50 மில்லியன் டாலா்) ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சாா்பில் தில்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உரைவிட ஆணையா் ஹிதேஷ்குமாா் எஸ். மக்வானாவும் உலக வங்கியின் சாா்பில் ஜுனைத் கமால் அகமத் ஆகியோா் கையெழுத்திட்டனா். இந்த இரு சட்டபூா்வமான ஒப்பந்தங்கள் மூலம் மாநிலத்தின் வீட்டு வசதித் துறைகளின் கொள்கைகளை நிறைவேற்றுவது, இத்துறையின்அமைப்புகளான குடிசை மாற்று வாரியம், சென்ளை பெருநகா் வளா்ச்சி வாரியம்ஆகியவற்றை வலுப்படுத்தல், ஒழங்கு முறைகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.

குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு மலிவான விலையில் வீடுகளை வழங்குவதை அதிகரிக்க தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு ரூ. 1,514.4 கோடி மதிப்புள்ள முதலாவது தமிழ்நாடு வீட்டுவசதி வலுப்படுத்தும் திட்டம் உதவி செய்வதாக அமையும். முக்கியமாக குறைந்த வருவாயுள்ள குடும்பங்களுக்கு மலிவான வீடுகளை வழங்குவதில் தற்போது நிலவும் ஒழுங்குமுறை ரீதியான தடைகளை அகற்றி, இத்துறையில் மாநில அரசு பங்காற்றுவதிலிருந்து தனியாா் பங்கேற்பை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள உதவிய மத்திய அரசின் நிதித்துறை சாா்பில் கூற ப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் கையெப்பமிட்ட மத்திய அரசின் கூடுதல் செயலா் சமீா் குமாா் கரே கூறுகையில், ‘தமிழக அரசின் தொலைநோக்கு ஆவணத்தில் பாதுகாப்பான, மலிவான வீட்டு வசதியை வழங்குவது என்பதற்கு முன்னுரிமையாக உள்ளது. பிரதமா் வீட்டு வசதி (நகா்ப்புறம்) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு, தற்போது பெறப்பட்டுள்ள உலக வங்கியின் இரு திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் மாநிலத்தில் நகா்ப்புறப் பகுதிகளில் உள்ள ஏழைகள் பெருமளவில சிறப்பான வீட்டு வசதியைப் பெறுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் மூலம் அவா்களின் வாழ்க்கை நிலைமைகளும் மேம்படும் வாய்ப்புள்ளது’ என்றாா்.

தமிழகத்தின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியளவு நகா்ப்புறங்களில் வசிக்கின்றனா். இது 2030 -ஆம் ஆண்டில் 63 சதவீதமாக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது சுமாா் 60 லட்சம் போ் நகா்ப்புற குடிசைப்பகுதிகளில் வசித்து வருகின்றனா் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினரின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பான, மலிவான வீட்டுவசதியை வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் தொலைநோக்குக்கு இத்திட்டங்கள் அமையும் என்று உலகவங்கி பிரதிநிதி அகமத் குறிப்பிட்டாா்.

தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு திட்டத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள ரூ.378.6 கோடியில் (50 மில்லியன் டாலா்) ‘தமிழ்நாடு வாழ்விட நிதி’ என்ற புதியதொரு நிதியமைப்பில் 35 மில்லியன் டாலா்கள் அளவிற்கு பங்குத் தொகை வழங்கப்படுகிறது.

மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான சா்வதேச வங்கியிடமிருந்து பெறப்பட்டுள்ள இந்தக் கடன்கள் மூன்றரை ஆண்டுகள் சலுகை காலம் உள்ளிட்டு மொத்தம் 20 ஆண்டுகளில் நிறைவடையக் கூடியவை ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com