நாமக்கல் அருகே முன்விரோதத்தில் இளைஞர் தலை துண்டித்துக் கொலை

நாமக்கல் அருகே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முன்விரோதத்தில் இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். 
கொலையான ஜெயக்குமார்
கொலையான ஜெயக்குமார்

நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முன்விரோதத்தில் இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். 

நாமக்கல்-துறையூர் சாலையில் அமைந்துள்ள கூலிப்பட்டி கிராமம் சாவடி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஜெயக்குமார் (40).  லாரிகளுக்கு பொருத்தும் கண்ணாடி விற்பனையகத்தை நடத்தி வந்தார். அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கூலிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜெயக்குமாரின் தாய் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியடைந்தார்.  இதனால் ஜெயக்குமாருக்கும், அப்பகுதியில் உள்ள சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. அதுமட்டுமன்றி கொடுக்கல் வாங்கல் பிரச்னை, பொது இடங்களில் தகராறு போன்றவற்றாலும் அவருக்கு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. புதன்கிழமை அதிகாலை கூலிப்பட்டி அருகே கந்தபுரி பேருந்து நிறுத்தம் முன்பாக ஜெயக்குமாரின் தலை மற்றும் உடல் வெட்டி துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலையாகி கிடந்தார்‌. 

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் நாமக்கல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, துணைக் காவல் கண்காணிப்பாளர் காந்தி, காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலையாகி கிடந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவம் பற்றிய கேள்வி அறிந்த கூலிப்பட்டி பகுதி மக்கள் நாமக்கல்- துறையூர் சாலையில் திரண்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கரோனா அச்சமின்றி, சமூக இடைவெளியின்றி மக்கள் திரளாக நின்றதால் காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நாமக்கல் காவல்துறையினர் ஜெயக்குமாரை கொலை செய்தவர்கள் குறித்து குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com