வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்: பொறுப்பு அதிகாரிகள் நியமனம்

சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
ஏடி.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன்.
ஏடி.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன்.


சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச்  சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இறந்தனர். 

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி, இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி குற்றவியல் நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே, அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது போலீஸார் ஒத்துழைப்பு தரவில்லையெனவும், தன்னை காவலர் மகாராஜன் என்பவர் தவறான வார்த்தையில் குறிப்பிட்டு பேசியதாகவும் மின்னஞ்சல் மூலம் உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி ஏடி.எஸ்.பி. குமார், சாத்தான்குளம் டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. மேலும், மூவரையும் பணியிடமாற்றம் செய்யவும் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக ஏடிஎஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார். இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறை வசம் கொண்டுவந்து, அதன் பொறுப்பு அதிகாரிகளாக சாத்தான்குளம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் செந்தூர்ராஜன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்  சுவாமிநாதன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமித்தார். அவர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடக்கும் நிகழ்வுகளை மேற்பார்வையிட்டு கண்காணித்து வருகின்றனர்.

நீதிபதி மீண்டும் விசாரணை: இதற்கிடையே, நெல்லை தடயவியல் துணை இயக்குநர் விஜயலதா, தூத்துக்குடி உதவி இயக்குநர் கலாலட்சுமி ஆகியோர் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு வந்து தடயங்கள், ஜெயராஜின் கடையில் உள்ள தடயங்களை சேகரித்தனர்.

கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் பிற்பகல் 1.40 மணியளவில் மீண்டும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு வந்தார். போலீஸார் வியாபாரிகளை தாக்கியதை நேரில் பார்த்ததாகத் தெரிவித்த பெண் காவலர் ரேவதியிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். விசாரணை இரவு  7மணி வரை நடைபெற்றது. இதையடுத்து, நீதிபதி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com