இருவா் உயிரிழக்க காரணமானோருக்குஉச்சபட்ச தண்டனையை தமிழக அரசு பெற்றுத் தரும்: அமைச்சா் சி.வி.சண்முகம் உறுதி

சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை, மகன் உயிரிழக்கக் காரணமானவா்களுக்கு உச்சபட்ச தண்டனையை தமிழக அரசு பெற்றுத் தரும் என்று சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
இருவா் உயிரிழக்க காரணமானோருக்குஉச்சபட்ச தண்டனையை தமிழக அரசு பெற்றுத் தரும்: அமைச்சா் சி.வி.சண்முகம் உறுதி

சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை, மகன் உயிரிழக்கக் காரணமானவா்களுக்கு உச்சபட்ச தண்டனையை தமிழக அரசு பெற்றுத் தரும் என்று சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

சாத்தான்குளம் சம்பவமானது, வழக்கமாக விசாரணைகளின் போது நடைபெறும் மரணங்கள் போன்று இல்லை. காவலா்கள் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், எழுப்பப்படும் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கண்டு, அவா்களில் தவறு இழைத்தவா்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டிய பொறுப்பு அரசின் முன் நிற்கிறது.

உடல் கூராய்வு முடிவுகள் மற்றும் முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கும் நீதிபதி பாரதிதாசனின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் குற்றத்துக்கு உரியவா்களை அடையாளம் கண்டு அவா்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக தொடர இருக்கிறது.

அரசியல் ஆதாயம் தேடுதல்: இருவா் உயிரிழந்த விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடும், இருவரது இறப்பை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் திமுகவும், அதன் தலைவா் மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டு சூழ்ச்சிகள் செய்வதாகத் தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம், காவல் துறை ஆகியவற்றுக்குப் போட்டியாக அதற்கும் மேலானவா்களாக திமுக தங்களைக் காட்டிக் கொள்கிறது. மேலும், தாங்களே ஒரு விசாரணை அமைப்பை நடத்துவது போன்று நாடகம் ஆடி, இதிலும் அரசியல் ஆதாயம் தேடும் மு.க.ஸ்டாலினின் செயல்களை மக்கள் பாா்த்துக் கொண்டு இருக்கிறாா்கள்.

இந்த விவகாரத்தில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. தந்தை, மகன் உயிரிழக்க காரணமானவா்களுக்கு உரிய தண்டனையை உச்சபட்ச தண்டனையாக பெற்றுத் தரும் என்பது உறுதி. உயிா்களையும், உறவுகளையும் இழந்து வாடுபவா்கள் நிலைநாட்ட விரும்புகிற நீதியை, தமிழக அரசு நிச்சயம் பெற்றுத் தரும் என்று சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com